search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிபாளையத்தில் கனிமொழி எம்பி பேசிய காட்சி.
    X
    பள்ளிபாளையத்தில் கனிமொழி எம்பி பேசிய காட்சி.

    மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை- கனிமொழி

    மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
    குமாரபாளையம்:

    தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்தார். பள்ளி பாளையத்தில் தொடங்கிய அவர் குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய பகுதியில் திறந்த வேனில் நின்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. அடுத்து ஆட்சி பொறுப்புக்கு வரப்போவது தி.மு.க. தான். இந்த பகுதியிலே 2 தொழில்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒன்று போக்குவரத்து. நாடு முழுவதும் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகம் செய்வதற்கு உங்களைத் தான் தமிழ்நாடு நம்பி இருக்கிறது என்ற நிலை இங்கே இருக்கிறது.

    நெசவு என்பது இந்த பகுதியிலே இருக்கக்கூடிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் ஆகும். இன்று மத்தியிலே இருக்க கூடிய பி.ஜே.பி. ஆட்சியும், இங்கு இருக்கிற அ.தி.மு.க. ஆட்சியும் எந்த ஒரு பிரச்சினையும் எடுத்துக்கூற முன் வரதாதால் நாம் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தியாவில் தினமும், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டு வரும் நிலையில் இந்த ஆட்சியில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை ஏறிக் கொண்டே வருகிறது. அதை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் மோடி இது மிகப்பெரிய அராஜகம் என்று அறிக்கை வெளியிடுவார். பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தாமல் மறுபடியும் மாட்டு வண்டிகளை பயன்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். பல நாடுகளில் ஜி.எஸ்.டி. உள்ளது. ஆனால் இந்தியாவில் இருக்க கூடிய ஜி.எஸ்.டி. போல குழப்பமான ஜி.எஸ்.டி.யை வேறு எங்குமே பார்க்க முடியாது.

    இங்கே இருக்க கூடிய அமைச்சர்கள் ஜி.எஸ்.டி கவுன்சில் வழியாக மத்திய அரசிடம் நமக்கு இருக்க கூடிய பிரச்சினைகளை எடுத்துக் கூறக்கூடிய தயார் நிலையில் இல்லை. ஆட்சிக்கு எதுவும் பிரச்சினை வந்து விடக் கூடாது என்ற ஒரே நிலைபாட்டுடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    அதனால் தான் தி.மு.க. ஆட்சியில் தந்த இலவச மின்சாரம் இன்று கேள்விக்குறியாக உள்ளது.

    நூல் விலை அதிகரிப்பால் பெரிய அளவில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் எதையுமே சிந்திக்காமல் முழு அடைப்பு என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள் என்ன செய்வது என்று தெரியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டதை நாம் பார்த்தோம்.

    இந்த ஆட்சியில் தற்போது எது நடந்தாலுமே ஆளுங்கட்சியில் இருப்பவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. சிறு சாயப் பட்டறைகளையெல்லாம் மூட கூடிய அளவிற்கு பிரச்சினையை உருவாக்கி விட்டு அமைச்சர் தனக்கு வேண்டியவர்கள் மற்றும் தன்னுடைய உறவினர்களுக்கு மட்டுமே பயன்படக் கூடிய வகையில் அந்த தொழிலை மாற்றிக் கொண்டுள்ள சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    சாய பூங்கா வேண்டும், சுத்திகரிப்பு நிலையம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தையோ, மருத்துவமனையையோ மேம்படுத்துவதில்லை. மருத்துவர்கள் கிடையாது, செவிலியர்கள் கிடையாது இப்படி இருக்க கூடிய சூழலில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் என்று அறிவித்துள்ளனர். அதுவும் அவர்களின் வருமானத்திற்கு வழி தேட கூடிய வகையில் இருக்கிறது. மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் கண்டிப்பாக இருக்காது. இங்கே இருக்க கூடிய நூல் விலையேற்றம், வண்டிப்பதிவு, சாயப்பூங்கா, சாயப்பட்டறை பற்றிய பிரச்சினைகள் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சரி செய்யப்படும் என்ற உறுதியை நான் வழங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×