search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி விமான நிலைய சுங்கத்துறை சோதனை அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி.
    X
    திருச்சி விமான நிலைய சுங்கத்துறை சோதனை அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி.

    திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று: ஊழியர்கள்-பயணிகள் அதிர்ச்சி

    திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால் ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல் இருந்ததையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சுங்கத்துறை அதிகாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டது திருச்சி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சுங்கத்துறை சோதனை அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சுங்கத்துறை அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பயணிகள் மூலமாக சுங்கத்துறை அதிகாரிக்கு கொரோனா பரவியதா? அல்லது வேறு ஏதாவது வழியில் பரவியதா? என்பது தெரியவில்லை.

    கொரோனா தாக்கம் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

    வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதற்கான சான்றிதழுடன் வரவேண்டும். திருச்சி விமான நிலையத்திற்கு வந்ததும் பயணிகள் அனைவரும் மருத்துவக் குழுவினர் பரிசோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாதவர்களை விமானத்தில் அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த புதுக்கோட்டை பெண் பயணி கொரோனா அறிகுறி இருப்பதற்கான சான்றிதழுடன் வந்தார். இருப்பினும் அவரை விமானத்தில் அழைத்து வந்துள்ளனர்.

    இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு விமான நிலைய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    திருச்சி விமான நிலையத்திற்கு அந்த பெண் பயணி வந்த போது சுகாதார குழுவினர் சான்றிதழை வாங்கி பார்த்த போது கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    எனவே இது போன்று வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாக சுங்கத்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என மருத்துவக் குழுவினர் சந்தேகிக்கின்றனர்.

    இதனிடையே சுங்கத்துறை அதிகாரி கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பியுள்ளார். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகளுக்கும் கொரோனா பரவி விடுமோ? என்ற அச்சம் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சுங்கத்துறை அதிகாரியால் சோதனை செய்யப்பட்ட பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×