search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    கோவில்பட்டியில் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிக்க திரண்ட பொதுமக்கள்

    எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் நடந்த பிரசார கூட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மு.க. ஸ்டாலினிடம் அளித்தனர்.
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்றிரவு பரமக்குடியில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான பந்தல்குடி விளக்கில் உற்சாக வரவேற்று வழங்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில்பட்டியில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கிய மு.க.ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் நடந்த இந்த பிரசார கூட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை மு.க. ஸ்டாலினிடம் அளித்தனர்.

    மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கலைஞர் திடலில் வடக்கு மாவட்டம் சார்பில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அமருவதற்கு வசதியாக சேர்களும் போடப்பட்டிருந்தது.

    மனுக்களை பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது தான் எனது முதல் பணி. நான் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 100 நாட்கள் மக்கள் பிரச்சினை தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணப்படும். அதற்கு நான் பொறுப்பு என தெரிவித்தார். அதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த குறைதீர்க்கும் மனு பெட்டியில் போட்டனர்.

    பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தபடி கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    வழக்கமாக போர்டுகள், போஸ்டர்களில் நிர்வாகிகள் பெயர் இடம் பெறும். ஆனால் இன்று வைக்கப்பட்டிருந்த அனைத்திலும் ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தர போறாரு என்ற வாசகம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படங்களும் இடம்பெற்றிருந்தது.

    கோவில்பட்டியில் இருந்து விழா நடைபெறும் எட்டயபுரம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடை வரை டிஜிட்டல் போர்டுகள், கொடிகள் வைக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் போர்டுகளில் அண்ணாவின் பொன்மொழிகள் இடம்பெற்றிருந்தன. மேடையின் பின்புறம் உள்ளவர்களும் நிகழ்ச்சிகளை காணும் வகையில் பல இடங்களில் அகன்ற திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    Next Story
    ×