search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை சம்பவம் நடந்த கோவிலில் போலீசார் விசாரணை நடத்தியதையும், உடைக்கப்பட்ட உண்டியலையும் படத்தில் காணலாம்
    X
    கொள்ளை சம்பவம் நடந்த கோவிலில் போலீசார் விசாரணை நடத்தியதையும், உடைக்கப்பட்ட உண்டியலையும் படத்தில் காணலாம்

    திருச்சி: கோவிலில் காவலாளியை தாக்கி அம்மன் நகை- உண்டியல் பணம் கொள்ளை

    திருச்சி விமான நிலையம் அருகே கோவிலில் காவலாளியை தாக்கி அம்மன் நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகே அறிவியல் கோளரங்கமும் அதன் எதிரிலேயே பிரசித்தி பெற்ற பச்சநாச்சியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. அனைத்து நாட்களிலும் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

    தனியார் நிர்வகித்து வரும் இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் அதிக அளவிலான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வார்கள். இங்கு திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் (வயது 63) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இரவில் பணிக்கு வரும் இவர் காலையில் கோவில் திறக்கப்பட்டதும் புறப்பட்டு செல்வார். இந்தநிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் நிர்வாகத்தினர் கோவிலை பூட்டி சென்றனர். தற்போது திருச்சியில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் கோவில் வளாகத்திலேயே காவலாளி ராஜரத்தினம் பணியில் இருந்தார்.

    அதிகாலை 3 மணியளவில் 2 மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் காவலாளி ராஜரத்தினத்தை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்து நிலைகுலைந்த அவர் மயங்கி விழுந்தார். பின்னர் கோவிலுக்குள் புகுந்த அவர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 2 தங்க காசுகள் மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் காவலாளி வைத்திருந்த ரூ.4,500 பணத்தை திருடினர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். லேசான மயக்கம் தெளிந்த ராஜரத்தினம் இதுபற்றி முதலில் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்தவர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் கூறினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் விட்டுச்சென்ற கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×