search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை
    X
    பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

    கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

    காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரி, பள்ளி, அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனை, நிறுவனங்கள், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    கோவை:

    இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் ஜெப கூட்டங்களை நடத்தி வரும் பால்தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் நேற்று ஒரே நாளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    பால் தினகரனுக்கு சொந்தமாக கோவை- சிறுவாணி ரோட்டில் காருண்யா பல்கலைக்கழகம் உள்ளது. இதுதவிர கோவை அம்மன் குளம் லட்சுமி மில்ஸ் பகுதியில் பள்ளியும், நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

    வரி ஏய்ப்பு புகார் காரணமாக நேற்று காலை முதல் பால்தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரி, பள்ளி, ஜெபக்கூடங்கள், கோவை அம்மன் குளம் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள பள்ளி உள்ளிட்ட இடங்களில் வருமானத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்த ஊழியர்கள், அதிகாரிகளின் செல்போன்களை பறிமுதல் செய்து வைத்து கொண்ட வருமான வரித்துறையினர் அவர்களை வெளியே அனுப்பவும் மறுத்து விட்டனர். நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை விடிய விடிய நடந்தது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே லட்சுமி மில் சந்திப்பில் உள்ள காருண்யா பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான பள்ளியில் நடந்த சோதனை நேற்று இரவு முடிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்து கொண்டு, அது சம்பந்தமாக விசாரிப்பதற்காக பள்ளி அதிகாரிகள், ஊழியர்களை காருண்யா பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சென்றனர். மற்ற இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் 2-வது நாளாக இன்று காலையும் காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரி, பள்ளி, அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனை, நிறுவனங்கள், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழக அதிகாரிகளிடம் மைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருமான வரித்துறை சோதனையை முன்னிட்டு காருண்யா பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வருமான வரித்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அங்குள் ளவர்கள் வெளியே வர தடை விதித்ததுடன், அவர்களது செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    அதன்படி இன்று அங்கு வேலைக்கு வந்த ஊழியர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்து விட்டு, வேலை செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர்.

    இந்த சோதனை 3 நாட்களுக்கு மேலாக நீடிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், அறக்கட்டளைக்கென தனி வரி விலக்கு வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட வரி விலக்கில் விதிமீறல்கள் நடந்திருந்தால் அதுவும், வரி ஏய்ப்பாகவே கருதப்படும். இயேசு அழைக்கிறார் அமைப்பிலும் வரி ஏய்ப்பு புகார் நடந்ததாக வந்த புகாரின் பேரிலேயே இந்த சோதனை நடக்கிறது. இந்த சோதனையில் 200-க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், முழுமையான விவரம் சோதனையின் முடிவில் தான் தெரியவரும் என்றனர்.

    Next Story
    ×