search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று காலை மழை பெய்தது. மழையில் குடை பிடித்தபடி செல்லும் பெண்களை படத்தில் காணலாம்.
    X
    நாகர்கோவிலில் இன்று காலை மழை பெய்தது. மழையில் குடை பிடித்தபடி செல்லும் பெண்களை படத்தில் காணலாம்.

    குமரியில் மீண்டும் பலத்த மழை- பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்

    பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் இன்று காலையில் நிறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 46.15 அடியாக இருந்தது.
    நாகர்கோவில்:

    குமரி கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு வாரமாக குமரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    கடந்த 2 நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கோட்டார் சாலையில் கழிவுநீர் மழை நீருடன் சேர்ந்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் இன்று காலையில் பலத்த மழை பெய்தது.

    தக்கலை, இரணியல் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்த மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மழை இல்லை. இதனால் அணைகளுக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் இன்று காலையில் நிறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 46.15 அடியாக இருந்தது. அணைக்கு 1,355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 732 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72 அடியை எட்டியது.

    அணைக்கு 454 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 153 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    ஆணைக்கிடங்கு-3.4, குருந்தன்கோடு-3, முள்ளங்கினாவிளை-2, திற்பரப்பு-11.8, நாகர்கோவில்-2.6, பூதப்பாண்டி-4.2, மயிலாடி-2.6, கொட்டாரம்-2.4, ஆரல்வாய்மொழி-1.
    Next Story
    ×