search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணையில் கூடியிருந்த சுற்றுலா பயணிகளில் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்
    X
    வைகை அணையில் கூடியிருந்த சுற்றுலா பயணிகளில் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்

    வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    காணும் பொங்கலையொட்டி வைகை அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஆண்டிப்பட்டி:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர்ந்து காணும் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலை கன்னிப்பொங்கல் அல்லது கனு பொங்கல் என்றும் கூறுவார்கள். உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களை பார்த்து நலம் விசாரித்தல், பெரியோர் ஆசிபெறுதல் உள்ளிட்ட வைபவங்கள் இந்த நாளில் நடைபெறும்.

    பொதுவாக காணும் பொங்கல் தினத்தன்று கிராமப்புறங்களில் உரியடி, வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதேபோல் சுற்றுலா தலங்களில் உறவினர்கள் ஒன்றுகூடி காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

    அதன்படி, நேற்று காணும் பொங்கலையொட்டி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மற்றும் அங்குள்ள பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக வெறிச்சோடி கிடந்த வைகை அணை பூங்கா நேற்று களைகட்டியது.

    கொரோனா ஊரடங்கு நேரத்தில் வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று அந்த பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்-சிறுமிகள் ஊஞ்சல், ராட்டினம் ஆடியும், சறுக்கு விளையாடியும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் அணையின் வலது கரையில் செயல்படும் சிறுவர்கள் உல்லாச ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இதில் சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரும் பயணம் செய்து உற்சாகம் அடைந்தனர்.
    Next Story
    ×