search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
    X
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அசர வைத்த காளைகள்... ஆரவாரத்துடன் அடக்கிய வீரர்கள்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.
    அலங்காநல்லூர்:

    உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது.

    மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெற்றது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது.

    போட்டியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காலை 8.25 மணிக்கு வாடிவாசல் முன்புள்ள திடலுக்கு வந்தனர்.

    அவர்களுக்கு விழாக்குழு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அழைத்து வரப்பட்டது.

    அந்த காளைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விழா மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம் பூங்கொத்து கொடுத்தார். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சை கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

    அதன் பிறகு முனியாண்டி கோவில் காளை உள்பட 3 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கக்கூடாது என்பதால் காளையர்கள் ஓரங்கட்டி நின்றனர்.

    3 காளைகளும் ஜல்லிக்கட்டு திடலை கடந்த பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

    உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு இடையூறு வந்தபோது, அந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு அம்மாவின் அரசு தூணாக விளங்கி, மிக எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெறுவதற்கு காரணகர்த்தாகவாக இருந்து, ஜல்லிக்கட்டு நாயகன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த, மரியாதைக்குரிய அண்ணன் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்த மண் அனைவராலும் பாராட்டப்படக்கூடிய மண்ணாகும். இந்த மண்ணிலே பிறந்த அத்தனை இளஞ்சிங்கங்களும், சீறி வருகின்ற காளைகளை பிடித்து அடக்குவதற்கான பக்குவத்தோடு இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு சீறி வருகின்ற காளைகளை அடக்குகின்ற இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த இந்த ஜல்லிக்கட்டு விழா உலகப் புகழ்பெற்ற விழா என்று சொன்னால் அது மிகையாகாது. உலக மக்கள் அனைவரும் காணக்கூடிய இந்த வீர விளையாட்டை, நம்முடைய கலாச்சார பண்பாட்டை, பாரம்பரியம் மிக்க பண்பாட்டைக் காக்கக் கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டை, அம்மாவின் அரசுதான் நிலைநிறுத்துகிறது என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

    இந்த வீர விளையாட்டில் கலந்து கொண்டிருக்கிற அனைத்து இளைஞர் பெருமக்களுக்கும், அதோடு, வீரமிக்க காளைகளை வளர்த்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், வருகை தந்திருக்கின்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதே கருத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வலியுறுத்தி பேசினார்.

    பன்நெடும் காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பெருமையும், பாரம்பரியமும் கொண்டது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனுமதி அம்மாவின் அரசு சார்பில்தான் கிடைக்கப்பெற்றது என்பதை மறந்து விடக்கூடாது என்று அவர் கூறினார்.

    அதன் பிறகு வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதனை அடக்க ஜல்லிக்கட்டு திடலில் திரண்டிருந்த காளையர்கள் மல்லுக்கட்டினர். சில காளைகள் களத்தில் நின்று விளையாடி வீரர்களை பந்தாடியது. இதேபோல் காளையர்களும் களத்தில் சுழன்று காளைகளின் திமிலை பிடித்து மடக்கினர்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை

    இந்த போட்டியை பார்ப்பதற்கு வசதியாக சுமார் 8 அடி உயரத்தில் 200 மீட்டர் நீளத்திற்கு இரும்பு தடுப்புகளுடன் காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்தபடி பார்வையாளர்கள் காளையர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.

    சிறப்பாக காளைகளை பிடித்த வீரர்களை அவர்கள் உற்சாகப்படுத்தினர். மேலும் களத்தில் நின்று வீரர்களை அச்சுறுத்திய காளைகளுக்கும் சபாஷ் கொடுத்தனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், தங்க காசுகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள், பிரிட்ஜ், பீரோ, டி.வி., பித்தளை பாத்திரங்கள், நாற்காலிகள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடக்க விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், பாஸ்கரன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, ரவீந்திரநாத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், அலங்கா நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றதை முன்னிட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தென் மண்டல ஐ.ஜி. முருகன் மேற்பார்வையில் மதுரை சரக டி.ஐ.ஜி. ராஜேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    முன்னதாக போட்டியில் பங்கேற்ற காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே களத்தில் இறக்கப்பட்டன.

    வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முக கவசம் அணிந்த பிறகே களத்தில் இறக்கப்பட்டனர். போட்டியில் பங்கேற்க 750 காளைகள், 550 காளையர்கள் தேர்வாகி இருந்தனர். மாடுபிடி வீரர்கள் சுற்று வாரியாக களத்தில் இறக்கப்பட்டனர். அவர்கள் ஆர்வத்துடன் களம் இறங்கி காளைகளை அடக்கினர்.

    உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் காளைகள் லாரி, வேன்களில் கொண்டு வரப்பட்டிருந்தன. அவைகளும் களத்தில் நின்று விளையாடி பரிசுகளை தட்டிச்சென்றன.
    Next Story
    ×