search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X
    கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    மதுரை:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்க்கு பல்வேறு நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன

    தற்போது முதற்கட்டமாக கொரோனோ நோய் பரவலை தடுக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாகியுள்ள கோவிசீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இன்று நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளன.

    தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் காணொலி காட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

    முன்னுரிமையாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், மதுரை கலெக்டர் அன்பழகன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநக ராட்சி கமி‌ஷனர் விசாகன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், மாணிக்கம், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கொரோனா தடுப்பூசி திட்டத்தையொட்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காத்திருப்பு அறை, கொரோனா தடுப்பூசி மையம், கண்காணிப்பு மையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருந்தன. அரசு சித்த மருத்துவ துறை சார்பில் கொரோனா நோய் தடுப்பு மருந்து மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன.

    இது தவிர இயற்கை மற்றும் யோகா மருத்துவ பிரிவு சார்பில் கொரோனா தடுப்பு மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசியை முதலில் முத்துமாரி (வயது 36) என்ற பெண் பணியாளர் போட்டுக்கொண்டார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சுகாதார ஊழியராக உள்ளார்.

    கொரோனா சிகிச்சை பிரிவில் முத்துமாரி இரவு, பகல் பாராமல் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் முதற்கட்டமாக 166 மையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

    தற்போது வரை கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 4.89 லட்சம் முன்களப் பணியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்.

    தமிழகத்துக்கு முதல் கட்டமாக 5.56 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இவைகளை இருப்பு வைப்பதற்கு தேவையான மையங்களும், மண்டல சேமிப்புக் கிடங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைக்க பிரத்யேக குளிர்சாதன பெட்டி அந்தந்த மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு ஊசி போட விரும்புபவர்கள் ஜனவரி 25ஆம் தேதி முதல் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி போடப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    கொரோனோ தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:-

    18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படாது. 14 நாட்கள் இடைவெளி அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களை பிரிக்க வேண்டும்.முதல் டோசில் எந்த தடுப்பூசி வழங்கப்பட்டதோ, அதே மருந்தை தான் 2-வது டோஸாகவும் வழங்க வேண்டும்.

    ரத்தப்போக்கு அல்லது ரத்தம் உறைதல் கோளாறு உள்ளவர்கள் தடுப்பூசியை எச்சரிக்கையுடன் போட்டு கொள்ள வேண்டும். நோய்த் தொற்று (செரோபாசிட்டிவ்) அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். பாசிடிவ் கொண்டவர்கள், நாள்பட்ட நோய்கள் (இருதய, நரம்பியல், நுரையீரல், வளர்சிதை மாற்றம், சிறுநீரக பாதிப்பு), நோய் எதிர்ப்பு பாதுகாப்பு, எச்.ஐ.வி பாதிப்பு உடையவர்களுக்கு அதிக கவனத்துடன் தடுப்பூசி போடப்படும். கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு என்று பிரத்யேகமான தனித்தனி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட உள்ள கோவாக்சின், கோவிசீல்டு ஆகிய தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. சோதனை அடிப்படையில் தமிழகத்தில் இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    எனவே மத்திய அரசு பரிந்துரைத்துள்ள இந்த 2 தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என அரசு தெரிவித்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 5 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அதிலும் குறிப்பாக மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனோ தடுப்பூசி சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் இன்று தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த மதுரை மாவட்ட சுகாதார அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
    Next Story
    ×