search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகளில் புகுந்த வெள்ளநீர்
    X
    வீடுகளில் புகுந்த வெள்ளநீர்

    தொடர்ந்து கொட்டும் கனமழை- தூத்துக்குடி மாநகரில் 5 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    தூத்துக்குடி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

    நேற்று அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 59 மில்லி மீட்டர் மழை பெய்தது. மழை காரணமாக தூத்துக்குடி மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.

    மாநகரில் டுவிபுரம், அண்ணாநகர், தாளமுத்துநகர், மீளவிட்டான், தருவைகுளம், பிரைண்ட்நகர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே தேங்கி மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத மின்மோட்டார் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் அகற்றினர்.

    இந்நிலையில் நேற்று மாலை கொட்டித் தீர்த்த கனமழை இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி யளித்தது. இதனால் சாலை களில் மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மழை காரணமாக மாநர பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகர சாலைகளில் சாக்கடை நீருடன், மழைநீரும் கலந்து செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஓடைகளிலும் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால் தற்போது கரைபுரண்டோடும் தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் புன்னக்காயலை சூழ்ந்துள்ளது.

    இங்குள்ள 100 வீடு காலனி, மறக்குடி தெரு, தெற்கு கீழத்தெரு, வடக்கு கீழத்தெரு, அந்தோனியார் கெபி தெரு, மாதா கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    மேலும் ஏராளமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் அங்கிருந்த மக்கள் சுமார் 1000 பேர் புன்னக்காயல் மேல் நிலைப்பள்ளி கட்டிடத்திலும், அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் நடைபெறும் விவசாயம் தாமிரபரணி ஆற்றின் கடைசி பகுதி ஆகும். இதில் ஆறுமுகநேரி பகுதியில் மட்டும் 3 குளங்களின் மூலம் சுமார் 1000 ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது.

    தற்போது நாற்றுகள் நடப்பட்டு வயல்கள் பச்சைப்பசேல் என காட்சியளித்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால் நெற்பயிர்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி விட்டன.

    Next Story
    ×