search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் மழை நீர் செல்வதை காணலாம்
    X
    சாலையில் மழை நீர் செல்வதை காணலாம்

    தொடர் மழை: நெல்லை-திருச்செந்தூர் பஸ் போக்குவரத்து 3வது நாளாக துண்டிப்பு

    தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருவதால் நெல்லை-திருச்செந்தூர் பஸ் போக்குவரத்து 3-வது நாளாக துண்டிக்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கடந்த 7 நாட்களாக சூரியனை பார்க்க முடியாத வகையில் இரவு-பகல் பாராது விட்டுவிட்டு தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியது.

    இன்று காலை வரையும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துள்ளது அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது.

    இதன்காரணமாக பாபநாசம் மணிமுத்தாறு அணைகள் மட்டும் அல்லாது நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் கொடுமுடியாறு அணையை தவிர மீதமுள்ள 10 அணைகளும் நிரம்பியது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக காணப்பட்டதால், அனைத்து அணைகளிலும் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் நேற்று தாமிரபரணி ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது. இன்று காலை தாமிரபரணி ஆற்றில் 53 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு கடலில் வீணாக கலக்கிறது. இதனால் கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

    சேரன்மகாதேவி பகுதியில் ஆற்றுக்கரையோர தெருக்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இதுபோல மணிமுத்தாறு கால்வாய் பகுதியில் உள்ள 4 கிராமங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. நெல்லை மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணார்பேட்டை பகுதியில் 250க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்றும் அதுபோல தொடர்ந்து வெள்ளபாதிப்பு உள்ளதால், பொதுமக்களுக்கு முகாம்களில் உணவளிக்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நெல்லை- திருச்செந்தூர் சாலையில் நேற்று முன்தினம் மாலை முதல் கருங்குளம் பகுதியில் மெயின்ரோட்டுக்கு மேல் 2 அடிவரை தண்ணீர் சென்றது. இதனால் அந்தவழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்றும் அந்தபகுதியில் சாலைக்கு மேல் தண்ணீர் ஆறுபோல ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்கள், வாகனங்கள், செய்துங்கநல்லூர் வழியாக வசவப்பபுரம்- தூத்துக்குடி 4 வழிச்சாலை சென்று, வாகைகுளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி வழியாக திருச்செந்தூர் சென்றது.

    இதுபோல இன்றும் சாலையில் தண்ணீர் செல்வதால் 3-வது நாளாக போக்குவரத்து சுற்றி செல்கிறது.

    இதுபோல தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஆறுமுகநேரி அருகே தாமிரபரணி கிளை கால்வாயின் வெள்ளம் சாலை மேல் 2 அடிக்கு சென்றது. இதனால் அந்த வழியாக திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டது. இன்றும் அந்தப்பகுதியில் 2-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    அந்த வழியாக திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்கள், வாகனங்கள், முக்காணி, ரவுண்டானா, ஏரல், குரும்பூர் வழியாக திருச்செந்தூருக்கு சென்று வருகிறது.

    வெள்ளம் பாதித்த பகுதியில் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு மீட்பு படையினர் இரவு பகல் பாராது மக்களை மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வருகிறார்கள். நேற்று நெல்லை வண்ணார்பேட்டை, சேரன்மகாதேவி பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராமமங்கலம் மற்றும் அப்பன்கோவில் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2 ஊர்களும் வெள்ளத்தில் மூழ்கியது.

    இதனால் அப்பகுதியில் வசித்து வரும் ஊர் மக்கள் அனைவரும் தங்களின் வீட்டு மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்து உயிர் பிழைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 25-க்கும் மேற்பட்டோர் அப்பன்கோவில் மற்றும் சிவராம மங்கலம் பகுதியில் வெள்ளத்தில் தவித்து வரும் பொது மக்களை மீட்டு வருகின்றனர்.

    அப்பகுதியில் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு மூதாட்டியை மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் காலையில் இருந்து தற்போது வரை 25 பேரை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

    நெல்லை டவுண் பகுதியில் இன்று தொடர்மழை காரணமாகவும், நெல்லை கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் காட்சி மண்டபம், செண்பகம் பிள்ளை தெரு, கல்லணை மாநகராட்சி பள்ளி பகுதி, பாட்டபத்து வயல்நடு பகுதிகளில் உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    பருவம் தவறி பெய்த இந்த அடைமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான நெற்பயிர்கள், வாழைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர்கள் பயிர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நெல், வாழை பயிர்கள் மூழ்கி உள்ளன. வெள்ளம் வடிந்த பிறகு தான் பயிர் சேதங்கள் முழுவிபரம் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை நேற்று அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டதால் பெரும் பொருட்சேதம், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×