search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வியாபாரிகள், ரசிகர்கள் குவிந்ததால் கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலைகளிலும் 100 அடி ரோட்டிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி, கோயம்பேட்டில் பொருட்கள் வாங்குவதற்கு வியாபாரிகளும், பொது மக்களும் இன்று காலை அதிகளவில் கூடினர்.

    அதேநேரத்தில் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் ‘மாஸ்டர்’ படம் பார்ப்பதற்காக ரசிகர்களும் திரண்டனர்.

    இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலைகளிலும் 100 அடி ரோட்டிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குறிப்பாக கோயம்பேடு பாலம் அருகே தியேட்டர் இருக்கும் பகுதியில் மாஸ்டர் படத்தை பார்ப்பதற்காக கூடிய விஜய் ரசிகர்களால் நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

    கோயம்பேடு மேம்பாலத் தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதேபோன்று பாலத்திற்கு கீழே உள்ள சாலையிலும் பஸ், கார், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்றன.

    பஸ் நிலையம் எதிரில் உள்ள 100 அடி சாலை நெரிசலில் சிக்கித் திணறியது.

    கோயம்பேடு மார்க்கெட் அருகே மெட்ரோ ரெயில் நிலைய பாலத்திற்கு அடியில் உள்ள சாலையில் மார்க்கெட்டுக்கு சென்ற லாரிகள் மற்றும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கரும்பு, மஞ்சள் குலை ஆகியவற்றை ஏற்றி வந்த லாரிகளும் சாலையோரமாக நிறுத்தப் பட்டு இருந்தன.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்று காலையில் கோயம்பேடு பகுதி வழியாக அலுவலகங்களுக்கு சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    முகப்பேர் பகுதியில் இருந்து எழும்பூர், பாரி முனை, கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக செல்வதற்கு வாகனங்களில் வந்தவர்கள் திரும்பி சென்று மாற்றுப்பாதை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

    இன்று காலை 7 மணி அளவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 10 மணிவரையில் நீடித்தது. இதையடுத்து போக்கு வரத்து நெரிசலை சரி செய்ய போலீசார் களம் இறங்கினார்கள்.

    போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். கோயம்பேடு மார்க்கெட் மற்றும் 100 அடி ரோடு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பஸ் நிலையம் எதிரில் மேம்பால பணிகளும் நடைபெற்று வருவதால், அங்கு ஏற்கனவே அதிக நெரிசல் காணப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் திரண்ட வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் மாஸ்டர் படத்துக்காக கூடிய ரசிகர்களால் கோயம் பேடு பகுதி நெரிசலால் திக்குமுக்காடியது.

    Next Story
    ×