search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு பஸ்கள்
    X
    சிறப்பு பஸ்கள்

    எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வராததால் பொங்கல் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு

    சிறப்பு பஸ்கள் பொது மக்கள் வசதிக்காக அறிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் குறைவான அளவே பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கடந்த 11-ந் தேதி முதல் சென்னை உள்பட தமிழகத்தின்பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் வழக்கமான பஸ்கள் 4,100 இயக்கப்பட்டன. இதுதவிர 1,660 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று இதுவரை இயக்கப்பட்ட மொத்த பஸ்கள் மூலம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 264 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். நேற்று வரை 2,216 சிறப்பு பஸ்கள் பொது மக்கள் வசதிக்காக அறிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் குறைவான அளவே பஸ்கள் இயக்கப்பட்டன.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 6,429 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 3 லட்சத்து 6,143 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுவரையில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடைசி நேரத்தில் பயணம் செய்யக் கூடியவர்கள் அதிகம் என்பதால் இன்று வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று வழக்கமான 2,050 பஸ்களுடன், சிறப்பு பஸ்கள் 1,952 சேர்த்து மொத்தம் 4,002 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

    இன்று காலை முதல் சிறப்பு பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நீண்ட தூரம் செல்லக்கூடிய பயணிகள் அதிகாலையிலேயே பயணத்தை தொடங்கினர்.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் இன்று கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தேவையை பொறுத்து கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம்.

    விடிய விடிய பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் நிலையங்களில் முகாமிட்டு உள்ளனர். எந்த பகுதிக்கு பஸ் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தற்போது ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான பேர் முன் பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்வார்கள்.

    ஒவ்வொரு ரெயிலிலும் ஆயிரம் பேர் முன்பதிவு செய்யாமல் செல்வார்கள். ஆனால் இப்போது அவ்வாறு பயணம் செய்ய இயலாது. அவர்கள் அனைவரும் அரசு பஸ்களுக்கு தான் வரவேண்டும் என்பதால் இன்று பிற்பகலுக்கு பிறகு பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அதற்கேற்றவாறு கூடுதலாக பஸ்களை இயக்க தயார் நிலையில் போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்ளனர்.

    Next Story
    ×