search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல்லில் 2 கோடி முட்டைகள் தேக்கம்

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான முட்டைகள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
    சேலம்:

    பறவைக்காய்ச்சல் பீதியால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 கோடி முட்டைகள் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    மீதம் உள்ள 2 கோடி முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பறவை காய்ச்சல் பீதியால் முட்டையை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் முட்டையின் நுகர்வு குறைந்துள்ளது. கேரளம் மற்றும் வட மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து முட்டை அனுப்புவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடையும் நிலை உருவாகி உள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான முட்டைகள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அதில் அவர் பேசியதாவது:-

    பறவை காய்ச்சல் பீதியால் வடமாநிலம் உள்பட பல்வேறு மண்டலங்களிலும் முட்டை விலை சரிவடைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி முட்டை வியாபாரிகள் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் மற்ற மண்டலங்களுக்கு இணையாக முட்டை விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    முட்டைகள் தேக்கமடைவதை தவிர்க்க அகில இந்திய விலைக்கு ஏற்ப முட்டை விலையை குறைக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கூறியதால் முட்டை விலை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 420 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பறவை காய்ச்சல் பீதியால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் குறைந்துள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதே போல பல்லடத்தில் நடந்த பி.சி.சி. கூட்டத்தில் ரூ.74 ஆக இருந்த கறிக்கோழி விலை மேலும் 2 ரூபாய் குறைத்து 72 ஆகவும், முட்டை கோழி கிலோ 50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசு கேரள எல்லைகளில் 26 இடங்களில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக செல்லும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×