search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு- தூத்துக்குடியில் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை நீடித்தது. தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 52.2 டவுண் பகுதியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்தது. பாளை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், சேரன்மகாதேவி, பாபநாசம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் நேற்று பிற்பகல் முதல் இன்று பகல் வரை விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது. இடையிடையே சில இடங்களில் கனமழையும் கொட்டியது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வேடநத்தம் பகுதியில் அதிகபட்சமாக 47 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாநகர், சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டிணம், குலசேகரன் பட்டிணம், ஸ்ரீவைகுண்டம், சூரங்குடி, வைப்பார் பகுதியிலும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய சாரல் மழை பெய்தது.

    மழை காரணமாக தூத்துக்குடியில் உள்ள பூல் பாண்டியாபுரம், திரேஷ்புரம், லூர்தம்மாள்புரம் அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையில் தேங்கிய தண்ணீர் தற்போது தான் மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அந்தப்பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்மழை காரணமாக பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நிரம்பியதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது.

    இதுபோல பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 2182 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது.

    இதுபோக மழை காரணமாக காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்வதால், தாமிபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை செல்வதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்று 2-வது நாளாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம் படித்துறைகள் மூழ்கி உள்ளது.

    சிங்கை, அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவ நல்லூர், சேரன் மகாதேவி, நெல்லை, குறுக்குத்துறை பகுதிகளில் ஆற்றில் குளிக்க முடியாதபடி இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    குறுக்குத்துறை முருகன் கோவில், தைப்பூச மண்டபம் ஆகியவை வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.

    தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க கூடாது என்றும் அருகில் நின்று செல்போனில் ‘செல்பி’ படம் எடுக்க கூடாது என்றும் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார். தாமிபரணி கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×