search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?- விசாரணையில் பரபரப்பு தகவல்

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே, ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 24). இவர் கடந்த 7-ந் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட எழும்பூர் ரெயில்வே போலீசார், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    லட்சுமணன் கடந்த சில மாதங்களாக உபயோகித்து வந்த செல்போன் திருட்டு செல்போன் என்றும், அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் பேசின் பாலம் போலீசார் கடந்த 5-ந் தேதி அவரை போலீஸ் நிலையம் அழைத்துள்ளனர். போலீஸ் நிலையம் வந்த அவருடைய செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த செல்போன் யாரிடம் இருந்து வாங்கப்பட்டதோ, அவரை அடையாளம் காட்ட மறுநாள் மீண்டும் போலீஸ் நிலையம் வர வேண்டும் என்று கூறி, அவரை வீட்டிற்கு அனுப்பினர்.

    இதையடுத்து லட்சுமணனின் தந்தை ஒரு வக்கீலுடன் போலீஸ் நிலையம் சென்றதாக தெரிகிறது. இந்த வழக்கில் இருந்து லட்சுமணனை விடுவிக்க ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று வக்கீல் கூறியதாகவும், வீட்டில் நகையை அடகு வைத்து கொடுத்த பணத்தை, அந்த வக்கீல், வழக்கை விசாரித்த போலீசிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும், மேற்கொண்டு பணம் வேண்டும் என்று சம்பந்தப்பட்ட போலீசார் கேட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லட்சுமணன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக, ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். மேலும் ரெயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணை குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×