search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதமடைந்த பயிர்களுடன் விவசாயிகள்.
    X
    சேதமடைந்த பயிர்களுடன் விவசாயிகள்.

    தஞ்சை மாவட்டத்தில் எலி தாக்குதலால் 1000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்

    மழை, புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் அதிகாரிகள் எலிகளால் பாதிக்கப்பட்ட பயிர்களையும் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் சம்பா சாகுபடி செய்த பயிர்கள் புயல் மற்றும் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் காற்று மழை காரணமாக வேரோடு சாய்ந்து அழுகிய நிலையில் உள்ளது. கடந்த சில சாட்களுக்கு முன்பு மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பயிர்கள் விவரங்களை குறிப்பெடுத்து கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் பூதலூர், ஒரத்தநாடு, வைரபெருமாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்களை எலிகள் அதிக அளவு தாக்கி வருவதால் பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

    ஏற்கனவே மழை புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் எலிகளாலும் பாதிப்படைவது விவசாயிகளை மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் எலி தொல்லையால் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் ஏக்கருக்கு இரண்டு மூட்டை கூட வராத நிலை உள்ளது.

    இது குறித்து வைரபெருமாள்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி முருகானந்தம் கூறும்போது:-

    நெற்பயிர்களை எலி பாடாய்படுத்தி வருகிறது. எலி பொறி வைத்து பிடித்தாலும் எலியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு சாகுபடிக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து வந்த நிலையில் ஒரு எலி பிடிப்பதற்கு ரூ. 30 வரை செலவாகும் வீதம் ஒரு ஏக்கருக்கு ரூ. 200 வரை செலவாகிறது. இதனால் பெரும் பொருளாதார செலவு ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

    மேலும் எலியை பிடித்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதன் பெருக்கம் என்பது அதிகரித்துள்ளது. இதுவரை எங்கள் பகுதியில் மட்டும் 800 எலிகள் பிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எலி தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து பயிர்களை பாடாய்படுத்தி வருவது என்பது தொடர் கதையாகி உள்ளது.

    எனவே எலியை கட்டுப்படுத்தி பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் அதிகாரிகள் எலிகளால் பாதிக்கப்பட்ட பயிர்களையும் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×