search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    புதிய அரசியல் மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்- கமல்ஹாசன் பிரசாரம்

    படித்து முடித்த இளைஞர்கள் தொழில் தொடங்கி முதலாளியாக மாற்ற முடியும், அதற்கான திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம் என்று கமல்ஹாசன் கூறினார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசி ஆதரவு திரட்டினார். மேலும் தர்மபுரி வன்னியர் மகாலில் 8 வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிந்தார்.

    தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    தர்மபுரி சரித்திரத்தில் இடம் பிடித்த ஊர். தர்மபுரி மாவட்டம் மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி , 5 மன்னர்களை வென்றெடுத்த பகுதி ஆகும். மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைந்தால் உலக தரத்திலான அருட்காட்சியகம் அமைக்கப்படும். தர்மபுரியில் 1989-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் வெற்றி பெற்றது. இங்கு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டத்துக்கு நான் சிறு பங்களிப்பு செய்துள்ளேன்.

    நான் வசதியாக வாழ்ந்தால் மட்டும் போதாது. இந்த மக்களை வசதியாக வாழ செய்து கொடுத்து விட்டு போவேன்.

    தற்போது 8 வழிச்சாலை தேவையில்லை. இதில் ஊழல் செய்வதற்காக தான் இந்த திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறார்கள். அரசு என்றால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். சேவைகள் என்றுமே மக்களை தேடி வர வேண்டும்.

    மாற்றத்தை தவிர வேறு எந்த கைமாற்றும் எதிர்பார்க்காமல் இங்கு மக்கள் திரண்டு உள்ளீர்கள். மக்களுக்கு நல திட்டங்களை தர்மம் போல் செய்து கொடுக்கக்கூடாது. டெல்லியில் உரிமைக்கு போராடும் விவசாயிகளுக்காக ஆதரவாக இனி தமிழகத்தில் இருந்து எதிரொலிக்கும். விவசாயிகளின் போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம தோள் கொடுக்கும்.

    இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும். தென்னகத்தில் உள்ள 6 மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படும்.

    எம்.ஜி.ஆரை. நான் கையில் எடுக்கவில்லை. அவர் தான் என்னை கையிலெடுத்தார். அவர் மடியில் அமர்ந்து அவர் உணவு ஊட்ட நான் சாப்பிட்டு இருக்கிறேன். எனக்கு அவர் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார்.

    எம்.ஜி.ஆரை தனிப்பட்டா போட அவர்களுக்கு உரிமை கிடையாது. அவர் வளர்த்த இரட்டை இலையில் இன்று 2 பேர் மட்டும் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். தற்போது ஒன்றாக இருக்கும் கூட்டுகள் விரைவில் உடையும். இவர்கள் அடித்து கொள்வதில் நாற்காலியின் கைபிடிகள் உடையும். அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    இதைத்தொடர்ந்து பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி, ஓசூரில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அது இன்னும் தீர்க்கப்படவில்லை.

    எனது பிரசாரத்துக்கு வரும் மக்கள் கூட்டத்தை சினிமாக்காரனை பார்க்க வந்த கூட்டம் என்று சிலர் கூறுகிறார்கள். இது மக்கள் கூட்டம் அல்ல. தமிழகத்தை மாற்ற வந்த கூட்டம் . தமிழகத்தை சீரமைக்க வந்துள்ள கூட்டம்.

    பெங்களுருக்கு இணையாக வளர்ந்திருக்க வேண்டிய ஓசூர், இன்று போக்குவரத்து நெரிசலில் உள்ளது. ஓசூர் பெரிய நகரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதை மாற்றும் வேலை உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் நினைத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும். ஒரு தலைமுறை செய்த தவறை நீங்கள் செய்யக்கூடாது. புதிய அரசியல் மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    மக்கள் நீதி மய்யம் பெண்களுக்கு பல புதிய திட்டங்களை வைத்திருக்கிறோம். படித்து முடித்த இளைஞர்கள் தொழில் தொடங்கி முதலாளியாக மாற்ற முடியும், அதற்கான திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கமல்ஹாசன் பேசினார்.

    இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார்.

    Next Story
    ×