search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    பா.ம.க. நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம்- பொதுக்குழுவில் தீர்மானம்

    சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    சென்னை:

    பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இணையவழி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும்.

    புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு கோரிய ரூ.3,758 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற விவசாயிகள் போராட்டத்துக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும்.

    தமிழகத்தில் அரசு பணிகள் தமிழர்களுக்கு தான் என்றும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீத வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்கும் வகையிலும் சட்டம் இயற்ற வேண்டும்.

    தமிழகத்தில் 31 மாவட்ட நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்வை எழுதிய 2,500 பேரில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு காரணம் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை தான் என்பது தெரிகிறது. போட்டித் தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண் வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் சமூக நீதிக்கு எதிரான தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு ஏற்கனவே இருந்த முறைப்படி நீதிபதிகள் தேர்வை நடத்த வேண்டும்.

    சென்னை-சேலம் இடையிலான 8 வழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும்.

    மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும். பேரறிவாளன் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்

    சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் வெற்றிகளை குவிப்பது. ஒவ்வொரு சமுதாயமும் வளர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சமுதாயத்துக்குமான வரைவு மேம்பாட்டு இலக்குகளை அந்தந்த சமுதாய பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்து உருவாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×