search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலை ரெயில்
    X
    ஊட்டி மலை ரெயில்

    மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் இன்று இயங்கியது

    9 மாதங்களுக்கு பிறகு சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பரவிய கொரோனா அச்சம் காரணமாக மலைரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வு தொடங்கியதும் மலைரெயில் இயக்கப்படும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் ரெயில் இயக்கப்படவில்லை.

    இதற்கிடையே தனியார் நிறுவனம் மலைரெயிலை வாடகைக்கு எடுத்து அதிக கட்டணத்துடன் இயக்கியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சாதாரண கட்டணத்தில் மலைரெயிலை இயக்க கோரிக்கை விடுத்தனர்.

    இந்தநிலையில் மீண்டும் சாதாரண கட்டணத்தில் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை இன்று முதல் தொடங்கும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்தது. இதையடுத்து ரெயிலில் பயணிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் முன் பதிவு செய்திருந்தனர்.

    9 மாதங்களுக்கு பிறகு இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. முன்பதிவு செய்திருந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ரெயிலில் பயணிக்க இருப்பதால் சுற்றுலா பயணிகள் பூசணிக்காய் உடைத்தும், கற்பூரம் காட்டியும் மலைரெயிலை வரவேற்றனர். ரெயிலில் சுற்றுலா பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பயணித்தனர். ஊட்டிக்கு செல்லும் வழியில் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தபடி பயணிகள் பயணித்தனர்.

    மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு 7.10 மணிக்கு புறப்பட்ட ரெயில் குன்னூர் வழியாக காலை 11.55 மணிக்கு ஊட்டியை சென்றடைந்தது.

    அதன்பின்னர் மாலை பிற்பகல் 2 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் ரெயில் மாலை 5.30 மணியளவில் மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.

    முன்னதாக மலை ரெயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக முதல் வகுப்பில் 36 இருக்கைகளும் 2-வது வகுப்பில் 97 இருக்கைகளும் ஒதுக்கப்பட்டிருந்தது. முதல் வகுப்பிற்கு முன் பதிவுடன் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு ரூபாய் 445, ஊட்டிக்கு ரூ.600, இரண்டாம் வகுப்பிற்கு முன்பதிவுடன் குன்னூருக்கு ரூ.190, ஊட்டிக்கு ரூ.295 என கொரோனாவுக்கு முந்தைய கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    9 மாதங்களுக்கு பிறகு சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×