search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    திருச்சி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

    திருச்சி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மண்ணச்சநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடை வீதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 38). இவர் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் கடந்த சில ஆண்டுகளாக நகைக்கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்தததால் அந்த பகுதியில் ஹரிகரனின் நகைக்கடை மிகவும் பிரபலமானது. தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் நகைச்சீட்டில் சேர்ந்தனர்.

    இதில் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை சீட்டுக்கான தவணை தொகையினை செலுத்தி வந்தனர். இதில் சீட்டு முடிவடைந்த வாடிக்கையாளர்களுக்கு நகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நகைக்கடை கடந்த 4 நாட்களாக மூடப்பட்டிருந்தது. மேலும் 2 நாட்கள் கடைக்கு விடுமுறை என்று அங்கு அறிவிப்பு பதாகை தொங்க விடப்பட்டிருந்தது. இதனால் நகைச் சீட்டுக்காக பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் கடையையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பலர் போலீசில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஹரிகரன், அவரது குடும்பத்துடன் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஹரிகரனை தேடும் பணியில் தாராபுரம் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் ஹரிகரன், தனது பெற்றோர் பலராமன் (75), புஷ்பா (73), மனைவி திவ்யா, மகன் அசோக் (8)ஆகியோருடன் கார் மூலம் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து அறை எடுத்து தங்கினார்.

    இன்று அதிகாலை ஹரிகரன், தனது குடும்பத்தினருடன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் 5 பேரும் நகை பாலீஷ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு வகை சயனைடை தின்றுள்ளனர். அப்பாது ஹரிகரனின் 8 வயது மகன் துடிதுடிப்பதை பார்த்து அவனை காப்பாற்ற போராடி உள்ளனர்.

    உடனே அவர்கள் அறை கதவை திறந்து மகனை தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். அப்போது ஓட்டல் ஊழியர்கள் நடந்த விபரத்தை அறிந்து உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹரிகரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அதனை அடைக்க முடியாததாலும், நகை சீட்டில் பணம் கட்டிய பொதுமக்களுக்கு நகைகளை வழங்க முடியாததாலும் அவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    Next Story
    ×