search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குக்கர் சின்னம்
    X
    குக்கர் சின்னம்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

    குக்கர் சின்னம் கட்சிக்கு கிடைத்த தகவலை அறிந்ததும் அ.ம.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    அவரது மறைவுக்கு பிறகு இந்த தொகுதியில் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனுக்கு சுயேட்சை சின்னம் ‘குக்கர்’ ஒதுக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் தினகரன் 40 ஆயிரத்து 707 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை.

    அதைத்தொடர்ந்து அ.ம.மு.க.வுக்கு மீண்டும் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் நல்லாசி பரிபூரணமாக பெற்றிருக்கும் நம்முடைய அ.ம.மு.க.வுக்கு வெற்றி சின்னமான குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    குக்கர் சின்னம் கட்சிக்கு கிடைத்த தகவலை அறிந்ததும் அ.ம.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.

    சென்னை சி.ஐ.டி.நகரில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளரும், தென் சென்னை மாவட்ட துணை செயலாளருமான செந்தமிழன் தலைமையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். இதுபோல் சென்னையில் பல்வேறு பகுதியில் கொண்டாட்டம் நடந்தது. இதுதவிர மற்ற மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×