search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலையூர் கண்மாயில் வைகை தண்ணீர் செல்வதை காணலாம்
    X
    நிலையூர் கண்மாயில் வைகை தண்ணீர் செல்வதை காணலாம்

    தென்கால்-நிலையூர் கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கால் மற்றும் நிலையூர் கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் பெரிய கண்மாய்களாக தென்கால் மற்றும் நிலையூர் கண்மாய்கள் அமைந்து உள்ளது. இந்த 2 கண்மாயும் கனமழை பெய்யும்பட்சத்திலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும்போதும் நிரம்பும். கடந்த வாரத்தில் புயல் காரணமாக கனமழை பெய்ததால் கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. இந்த நிலையில் மழை உபரி தண்ணீர் நிலையூர் கால்வாய் வழியாக கண்மாய்களுக்கு வந்தது. இதனையொட்டி 2 கண்மாயிலும் தண்ணீர் வந்தது. அதை கண்ட விவசாயிகள் வயல்களில் விவசாய பணிகளை மும்முரமாக தொடங்கினார்கள்.

    இந்தநிலையில் நிலையூர் கால்வாய் வழியாக வந்து கொண்டிருந்த உபரி மழைநீர் திடீரென்று அடைக்கப்பட்டு மாற்று கண்மாய்க்கு சென்றது. மேலும் மழையும் நின்றது. இதனால் எதிர்பார்த்தபடி முழுமையாக விவசாயம் செய்ய முடியுமா? நெற்கதிரில் பால் பிடிக்கும் பருவத்தில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகி விடுமோ? என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுந்தது. விவசாயிகள் பலர் நாற்று பாவியதோடு விவசாய பணி தொடங்குவதை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் வைகை அணையிலிருந்து திறக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

    இதுதொடர்பாக கடந்த வாரம் தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக நேற்று வைகை அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆகவே நிலையூர் கால்வாயில் வழியாக தென்கால் கண்மாய் மற்றும் நிலையூர் கண்மாய்களுக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, கண்மாய்கள் முழுமையாக நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக வரக்கூடிய தண்ணீர் போதாது ஆகவே தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட வேண்டும் என்றனர்.
    Next Story
    ×