search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமன் நாட்டில் இருந்து தப்பி வந்த மீனவர்களை காணலாம்
    X
    ஓமன் நாட்டில் இருந்து தப்பி வந்த மீனவர்களை காணலாம்

    ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர்

    ஓமனில் இருந்து படகில் 2,400 கி.மீ. தூரம் ‘திகில்’ பயணம் செய்து, குமரிக்கு தப்பி வந்த 5 மீனவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்தனர்.
    ராஜாக்கமங்கலம்:

    குமரி மாவட்டம் மேல முட்டத்தை சேர்ந்த சகாய ததேயுஸ் (வயது 46) தலைமையில் அதே ஊரை சேர்ந்த ஸ்டீபன் (52), ஜோசப் எட்வின் (40), பிரான்சிஸ் (58), கீழ முட்டம் அல்டோ (28) மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த முகமது ரஜிப் உடின் (27) ஆகியோர் ஓமன் நாட்டில் அப்துல்லா கமீஷ் என்பவருக்கு சொந்தமான விசை படகில் 14 மாதங்களாக வேலை செய்து வந்தனர்.

    கடந்த 4 மாதங்களாக இந்த மீனவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், பலமுறை கேட்டும், ஊதியம் வழங்காததால், குமரி மாவட்ட மீனவர்கள் இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த படகு உரிமையாளர் இந்திய தூதரகத்துக்கு எப்படி சென்றீர்கள் என கேட்டு அவர்களை தாக்கி சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு மேல் ஓமனில் இருந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதிய 5 மீனவர்களும் பாஸ்போர்ட் படகு உரிமையாளரிடமே இருந்ததால், படகிலேயே கடந்த 4-ந் தேதி புறப்பட்டனர். அந்த வகையில் சுமார் 2,400 கி.மீ. ‘திகில்’ பயணம் மேற்கொண்டு நேற்று அதிகாலை குமரி வந்து சேர்ந்தனர்.

    இதற்கிடையே விசை படகு உரிமையாளர் அப்துல்லா கமீஷ் ஓமன் நாட்டில் புகார் கொடுத்துள்ளார். அதனால் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன், கியூ பிரிவு மற்றும் மத்திய உளவு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மீனவர்கள் ஊர் திரும்பிய தகவல் அறிந்ததும், அவர்களது உறவினர்கள் நேரில் சென்று பார்த்து உணவு கொடுத்து, அவர்களை வரவேற்றனர்.

    இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி, ஆவணம் இல்லாமலும், அனுமதியின்றியும் குமரிக்கு வந்ததாக குமரி மீனவர்கள் 5 பேர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×