search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடூர் அணை
    X
    வீடூர் அணை

    வீடூர் அணை திறப்பு- சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ரெட்டிக்குப்பம், வீடூர், கொம்பூர், பொன்னாம்பூண்டி உள்பட 12 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 32 அடி ஆகும்.

    இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் 2,200 ஏக்கரும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    தற்போது செஞ்சி, மேல்மலையனூர், பனமலைகோட்டை ஆகிய பகுதிகளில் கனமழை நீடித்தது. இந்த தண்ணீர் முழுவதும் வீடூர் அணைக்கு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று 31.5 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று காலை அணை திறக்கப்பட்டது.

    அணைக்கு 1,600 கனஅடி நீர் வருகிறது. முதல்கட்டமாக 405 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் கலக்கிறது.

    எனவே, சங்கராபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ரெட்டிக்குப்பம், வீடூர், கொம்பூர், பொன்னாம்பூண்டி உள்பட 12 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்வரத்து செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×