search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை சிவாஜிநகர் பகுதியில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் தேங்கி நின்ற மழைநீர்
    X
    தஞ்சை சிவாஜிநகர் பகுதியில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் தேங்கி நின்ற மழைநீர்

    4 நாட்களாக கனமழை- தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    புரெவி புயலால் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி பின்பு வலுவிழந்து பாம்பன் அருகே நிலைக்கொண்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வீடு இடிந்து இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.

    பாபநாசம் தாலுகாவில் 35 கூரை வீடுகளும், 7 ஓட்டு வீடுகளும் என 42 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமடைந்தன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 52-க்கும் அதிகமான குடிசை வீடுகளில் சேதமடைந்துள்ளன

    ஒரத்தநாடு அருகே நெய்வேலி வடபாதி கிராமத்திலுள்ள சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரிக்கரை நேற்று உடைந்தது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும், வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது. கனமழையால் 14 வீடுகள் இடிந்து விழுந்தது. 5 ஆடுகள் கனமழைக்கு இறந்தன.

    பட்டுக்கோட்டையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    பட்டுக்கோட்டை நசுவினி ஆறு மற்றும் மதுக்கூர் அருகே உள்ள கண்ணன் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். ஒரத்தநாடு பகுதியில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் உடன் நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுக்கூர் அருகே உள்ள கண்ணன் ஆறு தரை பாலம் தொடர் மழையால் மூழ்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் மதுக்கூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் கூடூர் காற்றாற்றில் மழைவெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியில் ஒரு சில இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் பல்வேறு பகுதிகளில் சுமார் 4 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.

    நாகை அருகே ஓடம்போக்கி ஆற்றில் கரை உடைப்பு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வயல்கள் குளம்போல் காட்சி அளிக்கிறது.

    ஆற்றின் கரை உடைந்ததால் நரியக்குடியில் குடியிருப்பில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாப்பாக்கோவில் அரசு பள்ளியிலும், சமுதாயக் கூடத்திலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளன.

    சீர்காழி பகுதியில் தொடர்மழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆதமங்கலம் அருகே கொட்டாயிமேடு என்ற இடத்தில் உப்பனாற்றில் கரை உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

    மயிலாடுதுறை பகுதியிலும் வாய்க்கால்கள், ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உளுத்துகுப்பை ஊராட்சியில் உள்ள பனம்பள்ளி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.

    Next Story
    ×