search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    பூச்சாண்டி காட்டிய புரெவி புயல்- தூத்துக்குடியில் மிதமான மழை

    தென் மாவட்டங்களில் கனமழையை தரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘புரெவி’ புயல் பூச்சாண்டி காட்டிச் சென்றது. தூத்துக்குடியில் மிதமான மழையே பெய்தது.
    தூத்துக்குடி:

    வங்க கடலில் உருவாகி தென் தமிழகத்தை நோக்கி வந்த ‘புரெவி’ புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. நேற்று பொது விடுமுறை அளிக்கப்பட்டது. ரெயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    ஆனால், வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று எதுவும் நடக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வானம் மேகமூட்டமாக மட்டுமே காணப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்களில் ‘புரெவி’ புயல் குறித்த மீம்ஸ் அதிக அளவில் பகிரப்பட்டன.

    தூத்துக்குடியில் நேற்று முன்தினம் காலை முதல் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. நேற்று அதிகாலையில் மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே, திருச்செந்தூர் ரோடு, தபால் தந்தி காலனி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மோட்டார் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி அப்புறப்படுத்தினர். தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு பகுதியில் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ‘புரெவி’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தூத்துக்குடி வரை வரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

    ‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கையாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். ஆனால், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ‘புரெவி’ புயல் பூச்சாண்டி காட்டி சென்றது. பருவமழையை எதிர்பார்த்து இருந்த விவசாயிகளும் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று முன்தினம் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால், நேற்று பெரும்பாலான இடங்களில் மேகமூட்டமாக இருந்தது. சில இடங்களில் தூறல் மட்டுமே காணப்பட்டது.
    Next Story
    ×