search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்குமார்
    X
    ராஜ்குமார்

    வானத்தில் இருந்து 12,000 முறை குதித்து சாதனை படைத்த தேனி வீரர்

    வானத்தில் இருந்து 12 ஆயிரம் முறை குதித்து சாதனை படைத்த பெரியகுளம் வீரர் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 44). இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய போது வான்வெளி சாகசத்துக்காக தேர்வான 5 வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

    கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010 வரை அமெரிக்கா, ரஷ்யா, கனடா, நியூசிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த வான்வெளி சாகச போட்டிகளில் ராஜ்குமார் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். விமானம், ஹெலிகாப்டர் மூலம் 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துஅங்கிருந்து கீழே குதித்து ஒரு சில வினாடிகளில் குழுவினருடன் இணைந்து டைமண், சர்க்கிள் வடிவில் சாகசங்களை நிகழ்த்தி காட்டியுள்ளார்.

    பணி ஓய்வுக்கு பின் தன்னைப் போன்ற வான் சாகசத்தில் ஆர்வமுள்ள மக்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய பிரதேச மாநிலம் போபாலில் முதல் பயிற்சி பள்ளியை தொடங்கினார். மேலும் மைசூர், புதுச்சேரி, உத்தரபிரதேச மாநிலம் அலிக்கார், அரியானா மாநிலம் நர்னோ ஆகிய இடங்களிலும் பயிற்சி அளித்து வருகிறார்.

    72 மணி நேரத்தில் 8 ஆயிரம் முறை வானில் இருந்து குதித்து சாகசம் செய்ததை பாராட்டி கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின் ‘டென்சிங்நார்கே’ என்னும் உயரிய விருதை பெற்றுள்ளார். இந்த விருது அர்ஜூனா விருதுக்கு சமமானதாகும்.

    இதுகுறித்து ராஜ்குமார் தெரிவிக்கையில், 2006-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 92 மணி நேரத்தில் 12 ஆயிரம் முறை வானில் இருந்து குதித்து சாகசத்தை செய்துள்ளேன். எனது இந்த சாதனையை பாராட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசு பத்மஸ்ரீ விருதுக்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.
    Next Story
    ×