search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரி
    X
    கோவை அரசு ஆஸ்பத்திரி

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை குறித்து கண்காணிப்பு கேமிரா காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இங்கு அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் உடல்நிலையை பரிசோதித்து விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக இங்கு சிவப்பு, மஞ்சள், பச்சை என 3 வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சிவப்பு பிரிவான விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிவறையில் நேற்று வழக்கம்போல் பணியாளர்கள் சுத்தம் செய்ய சென்றனர்.

    அப்போது அங்கு பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை அசைவின்றி கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து மருத்துவ ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் அங்கு வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து பல மணி நேரம் இருக்கலாம் என்று தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிட்டு வீசி சென்றார்களா? அதை வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து ஆஸ்பத்திரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கடந்த 2 நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×