search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல்
    X
    மணல்

    தங்கத்துக்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

    குறைந்த விலையை அரசு நிர்ணயித்து இருந்தபோதிலும், தங்கத்திற்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
    மதுரை:

    தமிழகத்தில் பொதுப்பணித்துறை மூலம் நடத்தப்படும் அரசு மணல் குவாரிகளில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் வசதி உள்ளது. ஆனால் இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகளின் உதவியுடன் போலி முகவரி மூலம் பதிவு செய்து மணலை அதிக விலைக்கு விற்கிறார்கள். இதனால் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்ய முடிவதில்லை. எனவே, ஆன்லைன் வழியாக புக்கிங் செய்து, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கலான வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, “2 இடங்களில் பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது. அதில் பொதுமக்கள் நேரடியாக ஆன்லைனில் புக்கிங் செய்து எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. தற்போது இந்த வசதி நடைமுறையில் தான் உள்ளது” என்றார்.

    அப்போது நீதிபதிகள், “அரசு மணல் குவாரியில் இருந்து மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்பது தெரியும். ஆனால் அது பொதுமக்களுக்கு என்ன விலையில் கிடைக்கிறது?” என்று கேள்வி எழுப்பினர்.

    மேலும், “தற்போது மணலின் விலை ரூ.45 ஆயிரம் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் தங்கத்துக்கு நிகராக தமிழகத்தில் மணல் விற்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரசு நிர்ணயித்து உள்ள விலையில் மணல் கிடைப்பதில்லை” என்று கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் சாதாரண பொதுமக்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×