search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புயல் எச்சரிக்கை

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் வருகிற 2-ந்தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்படுகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    நெல்லை:

    இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் வருகிற 2-ந்தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்படுகிறது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று பாபநாசம் மலைப்பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும், நெல்லையில் 1 மில்லி மீட்டர் மழையும், சங்கரன்கோவிலில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

    சாரல் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 606 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அணையில் இருந்து பாசனத்திற்காக 1,404 கன அடி தண்ணீர் விவசாயம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப இன்னும் 17 அடி நீர்மட்டம் உயர வேண்டும். சேர்வலாறு அணை நீர்மட்டம் 125.62 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப இன்னும் 30 அடி நீர்மட்டம் உயர வேண்டும்.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் இன்று காலை 96 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப மேலும் 22 அடி நீர்மட்டம் உயர வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் வருகிற 2-ந்தேதி கனமழை பெய்யும் பட்சத்தில் நீர்மட்டம் உயர்ந்து அணைகள் அனைத்து நிரம்பி விட வாய்ப்பு உள்ளது. தென்காசி மாவட்டத்திலும் அனைத்து அணைகளும் நிரம்பி விட்டது.

    இதனால் அணையில் அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    அணை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளிலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 2-ந்தேதி முதல் ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளதால் 20 செ.மீட்டருக்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கடந்த 1992-ம் ஆண்டு தூத்துக்குடி அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெரு வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானவர்கள் பலியாகி, பலத்த சேதம் ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது தான் தென் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதனால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே தென் மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் குளக்கரைகள், கால்வாய்கள் உடைப்பு ஏற்படாமல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    தாமிரபரணி ஆற்றில் கடந்த மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதுபோல வருகிற 2-ந்தேதி விடுக்கப்பட்டுள்ள ‘ரெட் அலர்ட்’டிலும் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படாதபடி தண்ணீர் கடலில் கலக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தாமிரபரணி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×