search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் தூத்துக்குடியில் 600 மீனவர்கள் கரை திரும்பவில்லை

    தூத்துக்குடியில் கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதால் 600 மீனவர்களும் இன்று கரை திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மையம் கொண்டு வலு பெற்றுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 3-ந்தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், குமரிகடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரளம், மாலத்தீவு பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இது தொடர்பாக கடலோர மீனவ கிராமங்களுக்கும் புயல் தொடர்பான எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வருகிற 2-ந்தேதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் அதிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக புயல் எச்சரிக்கை விடுக்கும் முன்பு மீனவர்கள் சென்றனர். சுமார் 46 விசைப்படகுகளில் சென்ற தருவை குளம் மீனவர்கள் 600 பேர் இதுவரை கரை திரும்பவில்லை.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியபோது கூறியதாவது:

    கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தங்கள் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து கொள்ளவும்.

    ஏற்கனவே கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள செயற்கைகோள் தொலைபேசி வழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 600 மீனவர்களும் இன்று கரை திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மாவட்டத்திலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்டத்தில் இடிந்தகரை, கூத்தங்குழி, கூடுதாழை, உவரி, பெருமணல், கூட்டப்பனை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இதனால் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இங்கு விசைப்படகுகள் இல்லாததால் ஆழ்கடலில் போய் தங்கி மீன் பிடிக்க வாய்ப்பு இல்லை.

    இதற்கிடையே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மணப்பாடு, உவரி கடற்கரையில் நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

    Next Story
    ×