search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடை
    X
    ரேஷன் கடை

    ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மீண்டும் தொடங்குவது எப்போது?

    எந்திர கோளாறு என்ற காரணத்தால் நிறுத்தப்பட்ட ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மீண்டும் தொடங்குவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
    மதுரை:

    தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

    இந்த திட்டம் ஆந்திர பிரதேசம், பீகார், கோவா, குஜராத், அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி தொடங்கி வைத்தார். அப்போது இந்த திட்டம் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் 16-ந் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி மதுரையில் இந்த திட்டம் அறிவித்த தேதியை விட சற்று தாமதமாக தான் தொடங்கப்பட்டது. மதுரை மாவட்ட கலெக்டரும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் எந்திரம் ஒன்று பொருத்தப்பட்டது. ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கைரேகைகளை எந்திரத்தில் பதிவு செய்து எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது. மக்களுக்கு மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும் என்று நினைக்கப்பட்ட இந்த திட்டம் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே மூடுவிழா கண்டது.

    அதாவது கைரேகை பதிவு செய்யும் எந்திரங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. பல ரேஷன் கடைகளில் இந்த எந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ரேஷன் கடைகளில் எந்திரம் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய முடியாத நிலை உருவானது. எனவே மாநிலம் முழுவதும் இந்த திட்டம் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. மதுரையிலும் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படவில்லை.

    இந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. அதாவது புலம் பெயர்ந்து உள்ள பிற மாநிலத்தவர்கள் இங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும். தமிழக மக்களுக்காக மானிய விலையில் தமிழக அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை பிற மாநிலத்தவர்கள் வாங்குவதா என்ற அடிப்படையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

    ஆனால் தமிழக அரசு, பிற மாநிலத்தவர்கள் இங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினால் மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கு தான் விற்பனை செய்யப்படும். எந்த மானியமும் அவர்களுக்கு வழங்கப்படாது என்று விளக்கமளித்தது. இருப்பினும் இந்த திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் முடங்கி போய் விட்டது.

    இதுகுறித்து சிலர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தாங்கள் விரும்பும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற உன்னதமான திட்டம் தான் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பிற மாநிலத்திற்கு செல்லும் தமிழர்கள் அங்குள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி பயன்பெற முடியும். டிஜிட்டல் முறையில் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்கும் முறைகளால் பல்வேறு முறைகேடுகளை களைய முடியும்.

    ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு மாநில, மத்திய அரசுகள் மானியம் தருகிறது. எனவே தான் அங்கு சந்தை விலையை விட பொருட்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மக்களின் நலனுக்கான இந்த திட்டத்தில் முறைகேடுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இந்த முறைகேடுகளை களையும் வகையில் தான் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.

    மதுரை மாவட்டத்தில் சுமார் 12 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்தன. ஆதார் கார்டுகளை ரேஷன் கார்டுகளுடன் இணைத்த பிறகு மதுரை மாவட்டத்தில் 8 லட்சத்து 50 ஆயிரம் கார்டுகள் எண்ணிக்கை குறைந்தது. சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டன. அதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் மாதம் தோறும் மிச்சமானது. அதாவது நாடு முழுவதும் கோடி கணக்கான போலி கார்டுகள் ஒழிக்கப்பட்டன.

    தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரேஷன் கார்டுகளில் கூட பெரும்பாலானோர் பொருட்களை வாங்குவதில்லை. ஆனால் அவர்கள் பொருட்கள் வாங்கியதாக அந்த ரேஷன் கடைகளில் போலியாக பதிவு செய்யப்பட்டு, அந்த பொருட்கள் கள்ள சந்தையில் விற்பனைக்கு சென்று விடுகிறது.

    ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இந்த முறைகேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அதாவது சம்பந்தப்பட்டவர்கள் வந்து நேரிடையாக கைரேகை பதிவு செய்தால் தான் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படும். கைரேகை செய்யாதவர்களின் பொருட்களை போலியாக பில் போட முடியாது. எனவே அந்த பொருட்கள் அப்படியே தான் இருக்கும். அரசுக்கு மானிய தொகை மிச்சமாகும். ஆனால் தமிழகத்தில் துரதிர்ஷ்வசமாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருப்பினும் தமிழகத்தில் எந்திர கோளாறு என கூறி இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். விரைவில் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×