search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை கீழவாசல் பகுதியில் அகல் விளக்குகளை பெண்கள் வாங்கியதை காணலாம்
    X
    தஞ்சை கீழவாசல் பகுதியில் அகல் விளக்குகளை பெண்கள் வாங்கியதை காணலாம்

    நாளை கார்த்திகை தீப திருநாள்- தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை

    நாளை கார்த்திகை தீப திருநாளையொட்டி தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    தஞ்சாவூர்:

    இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் கார்த்திகை தீப திருநாளும் ஒன்றாகும். அன்றைய நாளில் அனைத்து வீடுகளிலும் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் வண்ண கோலம் போட்டு இருப்பார்கள். பின்னர் களிமண், பீங்கான் மற்றும் உலோகத்தினால் ஆன சிறிய அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு திரி போட்டு விளக்கேற்றி வைப்பார்கள்.

    இந்த விளக்குகளை வீடுகளின் வாசல் படிகள், ஜன்னல்கள், பால்கனிகள், முற்றம் ஆகியவற்றில் வைத்து அலங்கரிப்பார்கள். வீடுகளில் மட்டுமல்லாது அலுவலகங்கள், கோவில்கள் ஆகியவற்றிலும் விளக்குகள் ஏற்றி வைக்கப்படும். கார்த்திகை நட்சத்திற்கு முதல் நாள் பரணி தீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும், மறுநாள் சுடலை கார்த்திகை என்றும் 3 நாட்கள் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

    ஒரு சிலர் கார்த்திகை மாதம் முழுவதும் சிறிய அகல் விளக்குகள் இரண்டை மட்டும் தலைவாசலில் ஏற்றி வைக்கின்றனர். கார்த்திகை தீப திருநாள் நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக அகல் விளக்குகள் விற்பனை தஞ்சையில் நடைபெற்று வருகிறது. தஞ்சை கீழவாசலில் அகல் விளக்குகள், மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இங்கு நேற்றுகாலை முதல் ஏராளமானோர் வந்து அகல் விளக்குகளை வாங்கி சென்றனர்.

    ஒரு முக விளக்கு, 3 முக விளக்கு, 5 முக விளக்குகள் என தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி சென்றனர். சிறிய விளக்குகள், பெரிய விளக்குகள் என பல வடிவங்களில் விளக்குகள் விற்பனைக் காக வைக்கப்பட்டு இருந்தன. ஒரு முக விளக்குகள் 8 எண்ணிக்கையானது ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. துளசிமாட விளக்குகள் ஒன்று ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் மாநகரில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டிகள் மூலமாகவும், சாலையோர கடைகளிலும் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டன.

    இதேபோல் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பழமார்நேரி சாலை சந்திப்பில் அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர் மழை காரணமாக மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வரவில்லை.

    பீங்கானில் செய்யப்பட்ட சாதாரண அகல் விளக்குகள் மற்றும் அலங்கார விளக்குகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த விளக்குகள் 2 ரூபாய் முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பகலில் வெயில் அடித்ததால் ஏராளமான பெண்கள் அகல் விளக்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினார். தொடர்ந்து மழை பெய்ததால் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் அகல்விளக்கு உற்பத்தி செய்ய முடியவில்லை என்று உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×