search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசண்முகம்
    X
    சிவசண்முகம்

    கோவை-மதுரை மார்க்கத்தில் பயணிகளை அன்பாக நடத்தும் அரசு பஸ் கண்டக்டர்

    கோவை-மதுரை மார்க்கத்தில் பஸ்களில் செல்லும் பயணிகளை அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் அன்பாக நடத்துகிறார். மேலும் அவர் பஸ்சை சுத்தமாக வைத்துக் கொள்ள விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
    கோவை:

    கோவை சுண்டக்காமுத்தூர் ராமசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சிவசண்முகம். இவர் கோவை-மதுரை இடையே செல்லும் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். ஒண்டிப்புதூர் டெப்போவில் அவர் பணியாற்றி வருகிறார். பஸ்சில் செல்லும் பயணிகளிடம் இவருடைய அணுகுமுறை சற்று வித்தியாசமானது.

    பஸ்சில் பயணிகள் ஏறியதும் அவர் சில அறிவுரைகளை வழங்குவார். அதைக்கேட்டு ஆச்சரியம் அடையும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளையும் நடத்துனர் சிவசண்முகம் செய்து கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளும் அவர் தற்போது கொரோனா காரணமாக முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகளையும் தனது செலவில் பயணிகளுக்கு வழங்கி வருகிறார்.

    தனது அனுபவங்கள் குறித்து கண்டக்டர் சிவசண்முகம் கூறியதாவது:-

    நான் பஸ்சில் ஏறியதும், பயணிகளுக்கு தாழ்மையான வேண்டுகோளை வைப்பேன். பயணிகள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு, உங்களின் இனிமையான பயணத்திற்காக நமது அரசு போக்குவரத்து கழகத்துக்கும், உங்களோடு பணிபுரிய எங்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று கூறி நன்றி தெரிவிப்பேன்.

    நமது அரசு நல்ல பஸ்சை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த பஸ்சை சுத்தமாக வைப்பதற்கும், பழுது ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு நமக்கு உள்ளது. நீங்கள் சாப்பிடும் கழிவுகள், பாட்டில்கள் போன்றவற்றை பஸ்சின் 2 படிக்கட்டுகள் உள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள பையில் போட்டு விடுங்கள். வெளியேயும், பஸ்சுக்குள்ளும் போடாதீர்கள். சிலருக்கு வாந்தி வரும். அவ்வாறு உள்ளவர்களுக்கு நான் புளிப்பு மிட்டாய் மற்றும் வாந்தி வந்தால் அதற்காக அரசு அனுமதித்துள்ள பாலிதீன் பை தருகிறேன் என்று கனிவுடன் கூறுவேன்.

    அதன்பின்னர் வழியில் உள்ள ஊர் பெயர் மற்றும் அதற்கான கட்டணத்தையும் நான் டேப்பில் பதிவு செய்து சொல்லி விடுவேன். மேலும் இந்த பஸ்சில் பயணம் செய்பவர்கள் பல்வேறு வேலை காணமாக செல்வீர்கள். அந்த நோக்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு டிக்கெட் கொடுக்க தொடங்குவேன். முகக்கவசம் இல்லாமல் உள்ள பயணிகளுக்கு முகக்கவசம் இலவசமாக கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கண்டக்டர் சிவசண்முகம் பஸ்சில் பயணிகளிடம் அன்பாக பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதைப்பார்த்த அமெரிக்காவை சேர்ந்த தமிழர் ஒருவர் சிவசண்முகத்துக்கு 15 அமெரிக்க டாலர்களை பரிசாக அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×