search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    1 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

    நிவர் புயல் பாதிக்கப்படும் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    திருச்சி:

    கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பி சற்றே நிம்மதியடைந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் மீனவர்களை பெரிதும் மிரட்டி வருகிறது. நிவர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர புயலாக மாறியுள்ளது.

    இதனால் கடலோர மாவட்டங்கள் முழுவதிலும் சூறாவளி காற்றுடன் அதாவது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் வங்கக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் செல்லவில்லை. அவர்களுக்கு மீன் வளத்துறையும் அனுமதி மறுத்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து 4 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரம் நாட்டுப்படகுகளில் தினமும் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். தற்போது நிவர் புயல் காரணமாக அனைத்து படகுகளும் அந்தந்த கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    நாட்டுப்படகுகள் கரையில் இருந்து 1 கி.மீ. தூரத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை நம்பியுள்ளவர்கள் வேலையிழந்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தாளங்குடா, தேவனாம்பட்டினம், கடலூர் துறைமுகம், அக்கரைகோரி, முடசல்ஓடை, ராசாப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் ஆயிரம் விசைப்படகுகள், 3 ஆயிரம் பைபர் படகுகள், ஆயிரம் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வந்தனர்.

    புயல் சின்னம் காரணமாக பாதுகாப்பு கருதி கரைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாட்டுப்படகுகள் கரையில் இருந்து பல மீட்டர் தூரத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒருவார காலமாகவே கடலூர் மாவட்டத்தில் இருந்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தற்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து 480 விசைப்படகுகள், 1,000 பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். 12 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர். தற்போது புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. கரைக்கால் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்ரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் துறைமுகத்தில் இருந்து தினமும் 5 ஆயிரம் விசைப் படகுகள் மற்றும் 10 ஆயிரம் நாட்டுப்படகுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாத நிலையில் விசைப்படகுகள் பாம்பன் துறைமுக பகுதிலேயே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    நாகை மாவட்டத்தில் 1,500 விசைப்படகுகளும், 6 ஆயிரம் நாட்டுப்படகுகளும் உள்ளன. இங்குள்ள 67 மீனவ கிராமங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். நிவர் புயல் காரணமாக கடந்த சில தினங்களாகவே வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்லவில்லை.

    இதற்கிடையே இன்று காலை முதல் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதோடு, கடலும் அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதையடுத்து கரையோரங்களில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். மேலும் விசைப்படகுகளின் மேற்கூரைகள் மற்றும் தார்ப்பாய்களை அகற்றினர்.

    காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க வேண்டி இந்த முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டுப் படகுகளை சரையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எடுத்து சென்று பாதுப்பாக வைத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 32 மீனவ கிராமங்களில் இருந்து 770 விசைப்படகுகளும், 4 ஆயிரத்து 500 நாட்டுப்படகுகளும் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தன. தற்போதைய புயல் சின்னம் காரணமாக அனைத்து படகுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பே மாற்றப்பட்டன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் நிகழ்ந்த கஜா புயல் பாதிப்பில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட மீனவர்கள் நிவர் புயலில் இருந்து தங்களையும், தங்களது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கையில் முன் கூட்டியே இறங்கியுள்ளனர்.

    நிவர் புயல் பாதிக்கப்படும் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த மீன்பிடி தொழிலை நம்பியுள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.

    இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 ஆயிரத்து 150 விசைப்படகுகள், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கடலோர மீனவ கிராமங்களில் வசிப்பவர்களும் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
    Next Story
    ×