search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளியை காணலாம்
    X
    விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளியை காணலாம்

    கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகள் தயார் செய்யும் பணி தீவிரம்

    நாமக்கல் அருகே கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மண் விளக்குகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    நாமக்கல்:

    கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியில் சிறிய மண் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் நாமக்கல், சேலம், கரூர், தர்மபுரி, ஈரோடு, மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

    இதுகுறித்து மண் விளக்கு தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் 2 குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பரம்பரையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சீசனுக்கேற்ப பொங்கல் பானை, அண்டா பானை, சிட்டி விளக்கு உள்ளிட்டவைகளை செய்வோம். புதுச்சத்திரம், ஏளூர், அகரம் மற்றும் கரியபெருமாள் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுத்து வந்து விளக்கு செய்கின்றோம். மண்ணில் செய்யப்பட்ட புதிய விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி இட்டு தீபம் ஏற்றினால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் விளக்கு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் நாங்கள் தயாரிக்கும் விளக்குகள் விற்பனை சரிவு ஏற்பட்டு உள்ளது. போதிய வருமானம் இல்லாத போதிலும் குலத்தொழிலை விடக்கூடாது என்பதால் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம்.

    நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் விளக்குகள் தயாரிப்போம், 3 வடிவத்தில் தயாரிக்கப்படும் கை விளக்குகளை 75 காசுகள் முதல் 85 காசுகள் வரை விற்பனை செய்கிறோம். கைவிளக்கில் தான் விளக்கேற்ற வேண்டும் என்ற ஐதீகத்தால் தற்போது கைவிளக்கு விற்பனை சூடுபடித்து உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×