search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை
    X
    பாபநாசம் அணை

    பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு

    பாபநாசத்தில் நேற்று 122 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி மேலும் 3 அடி உயர்ந்து 125 அடியானது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள அணைகள், குளங்கள் என நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    நெல்லையில் நேற்று காலை முதலே வெயில் அடிக்க ஆரம்பித்தது. இதனால் மாநகர பகுதிகளான பாளை, சந்திப்பு, டவுன், வண்ணார் பேட்டை உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிய ஆரம்பித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று மழை விட்டு விட்டு பெய்தது. அம்பையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டரும், பாளை, பாபநாசத்தில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கி உள்ளது. பாபநாசத்தில் நேற்று 122 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி மேலும் 3 அடி உயர்ந்து 125 அடியானது.

    சேர்வலாறு அணை 3 அடி உயர்ந்து 143 அடியாக உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து 2,598.96 அடியாக உள்ளது. மணிமுத்தாறு நீர்மட்டம் 93.15 அடியாகவும், வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 17 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1493 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    தென்காசி மாவட்டத்திலும் நேற்று அதிகபட்சமாக சிவகிரியில் 11 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை குறைந்ததால் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் கடனா, ராமநதி, கருப்பாநதி உள்ளிட்ட அணைகள் நிரம்பின. ஏற்கனவே குண்டாறு அணை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நிரம்பி வழிகிறது.

    களக்காடு அருகே திருக்குறுங்குடியை அடுத்த தளவாய்புரத்தில் பொன்னாகுறிச்சி கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் கேசவநேரி குளத்தின் மறுகாலில் இருந்து ஏர்வாடி, பொன்னாகுறிச்சி குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயில் அமைக்கப்பட்ட ‌ஷட்டர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் உடைந்தது.

    இந்நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் தொடர் மழையினால் தளவாய்புரம் பொன்னாகுறிச்சி கால்வாயில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுக்கடங்காத வெள்ளத்தாலும், தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியதாலும் தளவாய்புரம் ‌ஷட்டர் அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அதன் வழியாக வெள்ளம் வெளியேறி வீணாகி வருகிறது.

    இதையடுத்து விவசாயிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூடைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பொன்னாகுறிச்சி குளத்திற்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதால் குளம் நிரம்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த குளத்தை நம்பியுள்ள 300 ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் கட்டளை உப்பாத்து ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருவரங்கநேரி குளத்திற்கு செல்லும் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் கரைபுரண்டது. இந்த வெள்ளம் கரைகளை தாண்டி அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்ததால் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் இந்த 2 ஓடைகளையும் சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வைப்பாறில் 98 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 42 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் தனசேகர் நகர் மெயின் ரோட்டில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மழை காரணமாக தூத்துக்குடியில் உப்பளங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன.

    கோவில்பட்டி பகுதியில் பெய்த தொடர்ந்து மழை காரணமாக அத்தை கொண்டான் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மாவட்டம் முழுவதும் 282.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×