search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள் (கோப்புப்படம்)
    X
    பள்ளி மாணவிகள் (கோப்புப்படம்)

    பள்ளிகள் திறப்பு தள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது- மாணவர்கள், பெற்றோர் வரவேற்பு

    பள்ளிகள் திறப்பது தள்ளிவைப்பு என தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என மாணவ-மாணவிகள், பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இருந்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி அரசு பள்ளி திறப்பு குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனைத்தொடர்ந்து பள்ளிகளை திறப்பது குறித்து தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தாத நிலையில் தற்போது மழை, பனிக்காலம் என்பதால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என தெரிவித்திருந்தனர். பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு இல்லை என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் தெரிவித்து கருத்துகள் வருமாறு:-

    தஞ்சை அன்புநகரை சேர்ந்த பள்ளி மாணவர யுவராஜ்:- கொரோனா வைரஸ் நோய் தொற்று பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது. அதே நேரத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதும் கஷ்டமாக இருக்கிறது. படிப்பு என்பது மிக அவசியம் தான். அதனை விட உயிர் என்பது மிக முக்கியமாகிறது. எனவே பள்ளிகள் தற்போது திறப்பு இல்லை என்கிற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

    தஞ்சை கீழவாசலை சேர்ந்த பள்ளி மாணவி மோனிகா:- பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு புறம் இது மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் வருத்தமாக உள்ளது. படிப்பு கெட்டுப்போகிறது. தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் பாடங்கள் படித்தாலும் வகுப்பறைக்கு சென்று படித்தது போல் இல்லை. பள்ளிக்கு சென்றால் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். இருப்பினும் மாணவர்கள் நலனில் அக்கறை உள்ளதால் அரசு பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்துள்ளது.

    பள்ளி மாணவி பிரீத்தி:- பள்ளிகள் 16-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவித்தது சந்தோசமாக இருந்தது. பள்ளிகளுக்கு சென்று பாடங்களை கற்றால் தான் நன்றாக இருக்கும். இருப்பினும் மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதால் தான் அரசு தற்போது பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்துள்ளது. இதுவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் இனி எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற ஏக்கம் தான் எங்கள் மனதில் எழுகிறது.

    தஞ்சை எல்லையம்மன்கோவில் தெருவை சேர்ந்த மாணவி ஸ்ரீலேகா ஸ்ரீநிதியின் தந்தை குஞ்சிதபாதம்:- மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது மற்ற மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. இதனால் ஒருவருக்கு தொற்று ஏற்படும் பட்சத்தில் அது சமூக பரவலாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவேகொரோனா தாக்கம் குறைந்த பின்பு பள்ளிகளை திறப்பது தான் சரி. அந்த வகையில் அரசு பள்ளிகள் திறக்கும் முடிவை தள்ளி வைத்து இருப்பது வரவேற்கத்தக்கது. பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்து இருப்பது குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும், சமூகத்துக்கும் பாதுகாப்பாக அமையும்.

    தஞ்சை துவாரகாநகரை சேர்ந்த மாணவர் கவுதமின் தாயார் சாந்தி:- கொரோனா தொற்று தற்போது தான் குறைந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகரிக்க கூடும். ஏனென்றால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது நண்பர்களுடன் விளையாடுவது, கைகுலுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அவ்வாறு இருக்கும் போது தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தொற்று இன்னும் குறைந்த பின்னர் பள்ளிகளை அதாவது ஜனவரி மாதத்துக்குப்பிறகு திறக்கலாம். தற்போது அரசு பள்ளிகள் திறக்கப்படுவதை தள்ளி வைத்திருப்பதை வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×