search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் அருவி
    X
    ஒகேனக்கல் அருவி

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி நீர் ஒகேனக்கல்லை கடந்து சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வந்தடைகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த வாரம் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நேற்று மாலை முதல் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 972 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×