search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்வரத்து குறைந்து காணப்படும் கிருஷ்ணா நதி கால்வாய்.
    X
    நீர்வரத்து குறைந்து காணப்படும் கிருஷ்ணா நதி கால்வாய்.

    கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தும் ஆந்திர விவசாயிகள்

    கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை ஆந்திர விவசாயிகள் பயன்படுத்துவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு 1983-ம் ஆண்டு ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆந்திர அரசு நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெற இந்த திட்டத்தை வகுத்தது. இதற்காக ஆந்திராவில் கிருஷ்ணா நதி கால்வாய் நெடுகிலும் ஆங்காங்கே மதகுகள் அமைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 21-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 1,200 கன அடி திறந்துவிடப்பட்ட தண்ணீர் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது 2 ஆயிரத்து 800 கன அடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இத்தனை நாட்களாக பூண்டி ஏரிக்கு சராசரியாக 800 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் மழை பொய்த்து போனதால் தற்போது அங்குள்ள விவசாயிகள் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீரை சாகுபடிக்கு பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை நீர்வரத்து 265 கனஅடியாக குறைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 28.95 அடி ஆக பதிவானது. 1,510 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி முதல் நேற்று வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2.536 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 500 கன அடி, புழல் ஏரிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை 59 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஆந்திர விவசாயிகள் இன்னும் 2 வாரங்கள் வரை சாகுபடிக்கு தண்ணீர் எடுக்க வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு வரும் மார்ச் மாதம் வரை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும் என்று ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×