search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய பத்திரப்பதிவு துணைத்தலைவர் வீட்டை காணலாம்
    X
    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய பத்திரப்பதிவு துணைத்தலைவர் வீட்டை காணலாம்

    சேலம் மண்டல பத்திரப்பதிவு துணைத்தலைவர் வீட்டில் பணம் பறிமுதல்- லஞ்ச ஒழிப்பு போலீசார்

    சேலம் மண்டல பத்திரப்பதிவு துணைத்தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் லட்சக்கணக்கில் பணம் மற்றும் தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பத்திரப்பதிவு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் துணைத்தலைவராக பணியாற்றி வருபவர் ஆனந்த் (வயது 45). இவர் நேற்று முன்தினம் திடீரென்று கடலூருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இதையொட்டி சேலம் அழகாபுரம் கைலாஷ் நகரில் உள்ள அவரது வீட்டில் பிரிவு உபசார விழா நடந்து உள்ளது. இதில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் நில புரோக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் ஆனந்துக்கு பரிசு பொருட்கள் வழங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நேற்று காலை திடீரென்று அவரது வீட்டிற்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை மாலை வரை நீடித்தது. பின்னர் அவரது அலுவலகத்திலும் தீவிர சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் தங்க காசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரப்பதிவு துணைத்தலைவர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, பத்திரப்பதிவு துணைத்தலைவர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் ரூ.13 லட்சம் மதிப்பிலான 34 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஆனந்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    பத்திரப்பதிவு துணைத்தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×