search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதர் மண்டிக்கிடக்கும் காலிமனை முன்பாக மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை
    X
    புதர் மண்டிக்கிடக்கும் காலிமனை முன்பாக மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை

    கொசு உற்பத்திக்கு காரணமான காலிமனைகளை முறைப்படுத்த திருச்சி மாநகராட்சி அதிரடி திட்டம்

    மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்திக்கு காரணமான காலி மனைகளை முறைப்படுத்த திருச்சி மாநகராட்சி அதிரடி திட்டம் தீட்டி களப்பணியில் இறங்கி உள்ளது.
    திருச்சி:

    100 ஆண்டுக்கும் மேலாக நகராட்சியாக இருந்த திருச்சி கடந்த 1994-ம் ஆண்டு மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. சுமார் 145 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள திருச்சி மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை சுமார் 10 லட்சம். மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக இவை ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம் என 4 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    திருச்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெற்று வெள்ளி விழா கொண்டாடப்பட்ட பின்னரும் திருச்சி நகரின் பல பகுதிகள் இன்னும் கிராமங்கள் போலவே காட்சியளிக்கின்றன. அதுவும் குறிப்பாக மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. தரமான சாலைகள் இல்லை, மின்விளக்கு வசதி இல்லை. இவை முக்கியமான அடிப்படை பிரச்சினைகள் ஆகும்.

    இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகள் தான். குறிப்பாக இந்த காலி மனைகள் பொன்மலை கோட்டம் அரியமங்கலம் கோட்டம் மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்டங்களில் அதிக அளவில் உள்ளன. இந்த காலி மனைகளில் மழைநீர் தேங்கி அவை டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தி கேந்திரமாக உள்ளன என்று சொன்னால் மிகையாகாது.

    மேலும் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் இந்த காலி மனைகளால் அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் படும் துயரங்களுக்கு எல்லையே இல்லை. மேலும் இந்த காலி மனைகளில் சாக்கடை நீரை திருப்பி விடுவதும் வழக்கமாக உள்ளது. இந்த காலி மனைகளின் உரிமையாளர்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? ஏன் இப்படி தங்களது மனைகளை காலியாகவைத்து இருக்கிறார்கள் என்பதற்கான விடை யாருக்கும் கிடைப்பதில்லை. காலி மனை அருகில் வசிப்பவர்களுக்கு கூட காலி மனையின் உரிமையாளர் யார் என்பது தெரியாது.

    இந்நிலையில் இந்த காலிமனைகளை முறைப்படுத்துவதற்காக திருச்சி மாநகராட்சி ஒரு அதிரடி திட்டத்தை வகுத்து தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. கொசு உற்பத்தி கேந்திரமாக உள்ள இந்த காலி மனைகளின் முன்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு. அந்த பதாகைகளில் ‘திருச்சி மாநகராட்சி அறிவிப்பு-இந்த இடம் பொது நோக்கத்திற்காக மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மாநகராட்சி பகுதி முழுவதும் இதுவரை சுமார் 250 இடங்களில் இதுபோன்ற அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மற்ற கோட்டங்களை விட பொன்மலை கோட்டத்தில் அதிகபட்சமாக 80-க்கும் மேற்பட்ட அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த திட்டம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது:-

    காலி மனைகள் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக அந்தந்த குடியிருப்பு பகுதியில் உள்ள நலச்சங்க நிர்வாகிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளோம். இதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. நாங்கள் இதுபோன்ற அறிவிப்பு பதாகை வைத்தவுடன் சம்பந்தப்பட்ட காலி மனையின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு வந்து ஏன் இப்படி ஒரு அறிவிப்பு பதாகை வைத்தீர்கள் என கேட்கிறார்கள். அப்போது அவர்களுக்கு நாங்கள் விளக்கம் அளித்து உங்கள் மனையை முறைப்படுத்துங்கள். சுத்தப்படுத்தி மதில் சுவர் எழுப்பி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி மையமாக மாறுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள் என அறிவுரை கூறி அனுப்புகிறோம்.

    இந்த அறிவுரையின் பலனாக இதுவரை நாங்கள் அறிவிப்பு பலகை வைத்த இடங்களில் சுமார் 80 சதவீத காலிமனை உரிமையாளர்கள் அவற்றை சுத்தப்படுத்தி பாதுகாப்பு சுவர் எழுப்பி வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படுவதோடு குப்பைகள் சேர்வதும் தடுக்கப்படுகிறது. இதுவரை எங்கள் பணியாளர்கள் தான் அந்த மனைகளிலும் சுத்தப்படுத்தும் பணியை செய்து வந்தார்கள். எங்கள் நடவடிக்கையால் இப்போது சம்பந்தப்பட்ட மனைகளின் உரிமையாளர்களே அவற்றை சுத்தப்படுத்தி விடுவதால் எங்களது தூய்மை பணியாளர்களுக்கும் வேலை மிச்சமாகிறது. இவை எல்லாவற்றையும் விட கொசுத்தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×