search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு மருத்துவக்கல்லூரியில் கட்டிட சாரம் இடிந்து விழுந்து இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    அரசு மருத்துவக்கல்லூரியில் கட்டிட சாரம் இடிந்து விழுந்து இருப்பதை படத்தில் காணலாம்.

    நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட சாரம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

    நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட சாரம் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக பின்புறத்தில் ரூ.338 கோடியே 76 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவதற்கு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து அங்கு கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளை நாமக்கல்லை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது. நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 60 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ள நிலையில் நேற்று காலை கட்டிடத்தின் முன்புற நுழைவுவாயிலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது.

    அப்போது கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது.

    இதுபற்றி அறிந்ததும் அமைச்சர் தங்கமணி அங்கு நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலை 6 மணி அளவில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கான்கிரீட் போட்டுக் கொண்டிருந்தபோது முட்டு அடைக்கப்பட்டிருந்த கம்பியில் வெல்டிங் விடுவிட்ட காரணத்தால் அதிகாரிகள் உடனடியாக அதை கண்டுபிடித்து நிறுத்தி விட்டனர். பின்னர் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் அவர்களாகவே அதை இடித்துவிட்டனர். அரசு கட்டிடங்கள் தரமாக கட்டப்படுகிறதா? என்பதை கண்காணிப்பது அதிகாரிகளின் பணியாகும். விபத்து என தகவல் வெளியானது போல் ஆஸ்பத்திரி கட்டிடம் இடிந்து விழவும் இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×