search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மூடப்பட்டுள்ள கடைகளை படத்தில் காணலாம்.
    X
    ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மூடப்பட்டுள்ள கடைகளை படத்தில் காணலாம்.

    ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் கடைகளை திறக்க அனுமதி வழங்க கோரிக்கை

    ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் கடைகளை திறக்க அனுமதி வழங்க கோரிக்கை விடுத்து வியாபாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் வரும் 3-ம் பிரகாரம் பகுதியில் சங்கு, சிப்பி மாலை, சாமி படங்கள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் சுமார் 50-க்கும் அதிகமான கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் ராமேசுவரம் பகுதியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ராமநாதசாமி கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் கோவிலின் மேற்கு வாசல் பகுதி வழியாக வரும் 3-ம் பிரகாரத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

    கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலின் மேற்கு வாசல் வழியில் 3-ம் பிரகாரத்தில் உள்ள கடைகள் திறக்கப்படுவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வருவதற்கும் திருக்கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பியே 3-ம் பிரகாரத்தில் கடை வைத்துள்ள அனைத்து கடைகளும் கடந்த 7 மாதத்திற்கு மேலாக திறக்கப்படாமல் மூடியே உள்ளன.

    கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களை நம்பியே வாழும் வியாபாரிகள் வருமானம் இன்றி குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோவிலின் மேற்குவாசல் வழியாக பக்தர்கள் வழக்கம்போல் சென்று வருவதற்கும், 7 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுக் கிடக்கும் 3-ம் பிரகார பகுதியில் உள்ள கடைகளை திறப்பதற்கும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், திருக்கோவில் நிர்வாகமும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கடை வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    Next Story
    ×