search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மூச்சுதிணறலுடன் வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தி குணமாக்குவது எப்படி?- கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பேராசிரியர் விளக்கம்

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தி குணமாக்குவது எப்படி? என்பது குறித்து கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மயக்கவியல் துறை பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
    கோவை:

    கோவையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் அறிகுறியின்றி பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். சிலர் மூச்சு திணறலுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் மூக்கு, கண், வாய் வழியாக தொண்டைக்குழிக்குள் செல்கிறது. அதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உரிய சிகிச்சை அளித்தால் வைரஸ் தொற்றை குணமாக்கி விடலாம். அதை கவனிக்கவில்லையென்றால் வைரஸ் நுரையீரலுக்குள் சென்று நுரையீரல் தொற்றாக மாறி மூச்சுத் திணறலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    இதன்மூலம் சிலருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு திடீரென்று 50 சதவீதத்துக்கு குறைவாக சென்று விடும். இதற்கு காரணம் வைரஸ் நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்று அர்த்தம். கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிப்பது அந்த நோயாளிக்கு எவ்வளவு ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது என்பது தான். அப்படி கொடுத்து நோயாளியின் உயிரை காப்பாற்ற முடிகிறது.

    இதுகுறித்து கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மயக்கவியல் துறை பேராசிரியர் கனகராஜன் கூறியதாவது:-

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நுரையீரல் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட நோயாளிகள் தான் சிகிச்சைக்கு வந்தனர். ஆனால் தற்போது அதிகமான நோயாளிகள் அதாவது 50 முதல் 80 சதவீதம் வரை நுரையீரல் பாதிப்புடன் வருகிறார்கள். நுரையீரலின் தன்மையை பொறுத்து சிலருக்கு அதிக நுரையீரல் பாதிப்பு இருந்தாலும் மூச்சு திணறல் ஏற்படுவது இல்லை. சிலருக்கு குறைந்த அளவு நுரையீரல் பாதிப்பு இருந்தாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இது அவரவர் நுரையீரலின் இயங்கும் தன்மையை பொறுத்தது.

    எனவே நுரையீரல் பாதிப்பு அளவை சி.டி. ஸ்கேன் மூலம் முதலில் கண்டுபிடிக்கிறோம். அதன்பின்பு தான் எந்த நோயாளிக்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவைப்படும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும். எனவே மூச்சு திணறலுடனும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாகவும் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நுரையீரல் பாதிப்பை வைத்து மட்டுமே நோயாளிகளுக்கு எந்த அளவு ஆக்சிஜன் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியாது. மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் ஆக்சிஜன் அளவை வைத்தே முடிவு செய்யப்படுகிறது.

    கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் சென்று தாக்குவதால் நுரையீரல் தடிமனாகிறது. இதனால் தேவையான ஆக்சிஜன் ரத்தத்தில் எடுத்துச் செல்லப்படுவது தடைபடுகிறது. ஆக்சிஜன் அளவும் குறைகிறது. சாதாரணமாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 97 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருக்க வேண்டும். இது 90 சதவீதத்துக்கு கீழ் குறையும் போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது மூன்று முறையில் அளிக்கப்படுகிறது. ஒன்று சாதாரண முகக்கவசத்தை நோயாளிகளுக்கு அணிவித்து அதன் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மற்றொரு முறை வென்டிலேட்டர் மூலமும், மூன்றாவது முறையில் எச்.எப்.என்.சி. என்ற பிரத்யேக எந்திரம் மூலமும் ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது.

    நாம் சுவாசிக்கும் காற்றில் 21 சதவீதம் தான் ஆக்சிஜன் உள்ளது. மீதி 79 சதவீதம் நைட்ரஜன் உள்பட பல்வேறு வாயுக்கள் உள்ளன. எனவே கொரோனா நோயாளிகளுக்கு சுத்தமான ஆக்சிஜன் அதாவது 100 சதவீதம் ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. அது எந்த நோயாளிக்கு எவ்வளவு கொடுக்கிறோம். எந்த வகையில் கொடுக்கிறோம் என்பதில் தான் முக்கியத்துவம் அடங்கி உள்ளது. அதாவது ஒரு நோயாளிக்கு ஒரு நிமிடத்துக்கு 5 லிட்டர் ஆக்சிஜன் கொடுக்கிறோமா? 10 முதல் 12 லிட்டர் ஆக்சிஜன் கொடுக்கிறோமோ என்பதை தீர்மானிப்பது அந்த நோயாளியின் மூச்சுவிடும் திறனையும், அவரது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவையும் பொறுத்தது. அந்த நோயாளியின் வயதை பொறுத்தது அல்ல.

    நோயாளியின் ஆக்சிஜன் அளவு 80 முதல் 85 சதவீதமாக இருந்தால் அதை அதிகரிக்க ஒரு நிமிடத்துக்கு 12 லிட்டர் ஆக்சிஜன் செலுத்துவோம். இவ்வாறு ஆக்சிஜன் கொடுக்க கொடுக்க ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 94 முதல் 96 சதவீதம் வரும் வரை கொடுத்துக் கொண்டேயிருப்போம்.

    நோயாளிக்கு எத்தனை நாள் வரை ஆக்சிஜன் கொடுக்கப்படும் என்பதில் கணக்கு கிடையாது. சில நோயாளிகளுக்கு 14 நாள், 20 நாள் வரை சுத்தமான ஆக்சிஜன் அளிக்கப்படும். சில நோயாளிகளுக்கு அதிகபட்சமாக ஒரு நிமிடத்துக்கு 70 லிட்டர் ஆக்சிஜன் வரை எச்.எப்.என்.சி. எந்திரம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு ஆக்சிஜன் தேவைப்படும் என்பது நுரையீரல் பாதிப்பை பொறுத்தது. சிலருக்கு 6 லிட்டர் ஆக்சிஜன் செலுத்தினாலே நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும். சிலருக்கு 70 லிட்டர் ஆக்சிஜன் கொடுக்க வேண்டியிருக்கும்.

    நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுக்க கொடுக்க அவருடைய நுரையீரல் மெல்ல மெல்ல செயல்பட தொடங்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் குணமாவது சற்று சிரமம். நோயாளிகள் விரைவில் மீண்டு வருவதில் அவர்களின் வயதும் முக்கியத்துவம் பெறுகிறது.

    கொரோனா நோயாளிக்கு ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு போதிய அளவு ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவருக்கு வைரஸ் தடுப்பு மருந்து, வைரசினால் இருதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய இடங்களில் ஏற்படும் சின்ன சின்ன ரத்ததக்குழாய் அடைப்பை நீக்குவதற்கான மருந்தும், வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் வீக்கம் மற்றும் பாதிப்பை சரி செய்வதற்கு ஸ்டீராய்டு மருந்தும் கொடுக்கிறோம். இவ்வாறு மூச்சு திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×