search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோனா

    குமரி மாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் பெண் கலெக்டருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட வருவாய் அதிகாரியாக ரேவதி பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாவட்ட வருவாய் அதிகாரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவருடைய அலுவலகத்துக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அவருடைய குடும்பத்தினர் மற்றும், அவருடைய அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அதே சமயத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்த பல்வேறு ஆய்வு கூட்டங்கள், அதிகாரிகளுடனான கூட்டங்களில் கலந்து கொண்டார். இதையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் என 50-க்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத்துறையினரால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கான பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் பெண் கலெக்டராக பணியாற்றி வரும் மெர்சி ரம்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவரும் சமீபத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பங்கேற்ற கலெக்டர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து கூடுதல் கலெக்டர் அலுவலக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும் அவருடைய அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி, கூடுதல் கலெக்டர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×