search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணிக்கம்தாகூர் எம்.பி. முன்னிலையில் விவசாயி ஒருவர் கையெழுத்து போட்ட போது எடுத்த படம்.
    X
    மாணிக்கம்தாகூர் எம்.பி. முன்னிலையில் விவசாயி ஒருவர் கையெழுத்து போட்ட போது எடுத்த படம்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும்: மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி

    2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும் என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. சிவகாசியில் பேட்டி அளித்தார்.
    சிவகாசி:

    மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் தொடர்பான சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி, விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று இந்த சட்டங்களை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு அனுப்ப முடிவு செய்து அற்கான தொடக்க நிகழ்ச்சி சிவகாசி வட்டாரத்தில் உள்ள சித்துராஜபுரத்தில் நேற்று நடைபெற்றது.

    மாவட்ட தலைவர்கள் ராஜாசொக்கர், தளவாய்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் அரசன் அசோகன் முன்னிலை வகித்தார். வட்டாரதலைவர் ஜீ.பி.முருகன் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட மாணிக்கம்தாகூர் எம்.பி. விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பை தொடர்ந்து 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று நவம்பர் மாதம் 19-ந்தேதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கு இந்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து பெறப்படும். பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை விவசாயிகள் நன்கு புரிந்து கொண்டனர்.

    மோடியின் அரசு அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாக சட்டங்களை இயற்றி வருகிறது. இந்தியா முழுவதும் இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கிறது. இந்த சட்டத்தால் தமிழகத்திலும் விவசாயம் அழியும். இந்த மசோதாவுக்கு துணை நின்ற அ.தி.மு.க. தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்து இருக்கிறது. பா.ஜ.க. அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மசோதாவால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்குமான தொடர்பு முற்றிலும் சீர்குலையும். இந்த புதிய சட்டத்தால் இனி வரும் காலங்களில் விளைபொருட்களின் பதுக்கல் அதிகமாகும். அவ்வாறு பதுக்கல் அதிகம் ஆனால் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. பெரும் வணிகர்கள் மட்டும் தான் லாபம் அடைவார்கள்.

    2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூடி முடிவு செய்யும். தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்கும். தமிழகத்தில் உள்ள பா.ஜ.க.வின் அடிமை அரசான அ.தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருக்கிறது.

    அ.தி.மு.க. அரசு கடைசி காலக்கட்டத்தில் உள்ளது. ஊழல் தான் முக்கிய கொள்கையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் சின்னதம்பி, மீனாட்சிசுந்தரம், குமரன், கணேசன், முத்துமணி, பைபாஸ் வைரம், தர்மராஜ், சங்கர்ராஜா, காளியப்பன், ராஜம்மாள், விஜயலட்சுமி, தங்கபாண்டியம்மாள், மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×