search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட வெள்ளை சிவலிங்கம்
    X
    மீட்கப்பட்ட வெள்ளை சிவலிங்கம்

    வெள்ளை சிவலிங்கத்தை திருடி ஆந்திராவில் பதுக்கிய 2 பேர் கைது

    வெள்ளை சிவலிங்கத்தை திருடி ஆந்திராவில் பதுக்கிய 2 பேரை திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு குற்ற வழக்கில் ஏற்கனவே இறுதி விசாரணை முடிவடைந்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் கூடுதல் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இதுவரை கண்டறியப்படாத குற்றவாளிகளான மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த சிவசங்கரன்(வயது 35), மதுரை திருவாதவூரை சேர்ந்த ராஜேஷ்கண்ணன்(38) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், இவர்கள் காசியில் பாபாஜி ஒருவரிடம் இருந்து, 3 சிவலிங்கத்தை திருடி கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அதில் இருந்த வெள்ளை சிவலிங்கத்தை கூடுதல் விலைக்கு விற்பதற்காக ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை சூப்பிரண்டு கதிரவன், இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி ஆகியோர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று 16.450 கிலோ எடை உள்ள வெள்ளைநிற சிவலிங்கத்தை கண்டுபிடித்து கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சிவலிங்கத்தை கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×