search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதயவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாசில்தார் ஆய்வு செய்தார்
    X
    சதயவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாசில்தார் ஆய்வு செய்தார்

    தஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா

    தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவை ஒருநாள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சதயவிழா நடைபெறுமா? என கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில் சதயவிழாவை ஒருநாள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது.

    அன்றைய தினமம் காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. காலை 6.30 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்படுகிறது. 9.15 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடக்கிறது. கொரோனா தொற்று காரணமாக சாமி திருவீதி உலா நான்கு ராஜ வீதிகளான மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதியில் நடைபெறாது. இரவு 8 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.

    மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சதய விழாவில் கொரோனா தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். விழாவில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

    கை கழுவ குழாய்கள் அமைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோவிலுக்கு வருபவர்களை வெப்பமானி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். தற்காலிக மருத்துவ முகாம் அமைக்க வேண்டும. ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய மருத்துவ குழுவினரை தயார் நிலையில் சுகாதாரத்துறையினர் வைத்திருக்க வேண்டும்.

    விழாவிற்கு வருகை தருபவர்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைந்து சதயவிழா முன்னேற்பாடு பணிகளை வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தர், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், சதயவிழாக்குழு தலைவர் துரை.திருஞானம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் சதய விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். தஞ்சை பெரிய கோவிலில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாரதிராஜன்(தஞ்சை), சீத்தாராமன்(வல்லம்), கோவில் செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் ரெங்கராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரா, சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×